நான்காவது நிலநடுக்கம் நியூசிலாந்தின் வடக்கு தீவை உலுக்கியுள்ளது. எனினும் விடுக்கப்பட்ட சுனாமி அச்சுறுத்தலானது தணிந்துள்ளது.

தொடர் நிலநடுக்கங்களின் தாக்கத்தினால் அச்சத்தில் குறித்த பகுதி வாழ் குடியிருப்பாளர்கள் பாதுகாப்பிற்காக தங்களது வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களை நோக்கி படையெடுத்தனர். 

முதலாவது நிலநடுக்கம் பதிவான பின்னர் அதிகாரிகள் சுனாமி எச்சரிக்கையை விடுத்தனர், அதனையடுத்து இரண்டு நிலநடுக்கங்கள் பதிவாக அப் பகுதி வாழ் குடியிருப்பாளர்களை வீடுகளை காலி செய்து விட்டு பாதுகாப்பான இடங்களை நோக்கி வெளியேறுமாறும் அறிவுறுத்தல் வழங்கினர்.

நியூஸிலாந்து நேரப்படி வெள்ளிக்கிழமை அதிகாலை 2.27 மணிக்கு (13.27 Thursday GMT) கிஸ்போர்ன் நகரிலிருந்து வடகிழக்கில் 180 கிலோமீட்டர் (111 மைல்) தொலைவில் 10 கி.மீ. ஆழத்தில் 7.3 ரிச்டெர் அளிவில் முதலாவது நிலநடுக்கம் ஏற்பட்டது.

அதன் பின்னர் நான்கு மணிநேரம் கழித்து கெர்மடெக் தீவுகளுக்கு அருகே 7.4 ரிச்டெர் அளிவிலான இரண்டாவது நிலநடுக்கம் பதிவானது.

காலை 8.28 மணிக்கு 8.1 ரிச்டெர் அளவிலான மூன்றாவது நிலநடுக்கமும், பிற்பகல் 12.12 மணிக்கு 6.5 ரிச்டெர் அளவிலான மூன்றாவது நிலநடுக்கமும் நியூஸிலாந்‍தை உலுக்கியது.

பின்னர் நிலைமைகள் வழமைக்கு திரும்ப விடுக்கப்பட்ட சுனாமி அச்சுறுத்தலும் பிற்பகல் 2 மணியளவில் நீக்கப்பட்டதுடன் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டவர்களும் தங்களது வீடுகளுக்கு திரும்பலாம் எனவும் கூறப்பட்டது.

7,500 கிலோமீட்டருக்கும் அதிகமான தொலைவில் உள்ள ஹவாய் உட்பட பசுபிக் முழுவதும் உள்ள பல தீவுகளுக்கு சுனாமி எச்சரிக்கைகள் வழங்கப்பட்டிருந்தன.

அதேநேரத்தில் அவுஸ்திரேலியாவின் நோர்போக் தீவில் இரண்டு அடி அலைகள் பதிவாகியுள்ளன.

'ஆபத்தான அலைகள் மற்றும் வலுவான கடல் நீரோட்டங்கள்' குறித்து கடல் அதிகாரிகள் எச்சரித்த போதிலும் தீவில் எந்த சேதமும் ஏற்படவில்லை.

நியூசிலாந்தின் தலைநகரான வெலிங்டனும் சுனாமி கண்காணிப்பில் வைக்கப்பட்டு படகுகள் சேவைகளும் ஸ்தம்பித்திருந்தன.