(எம்.மனோசித்ரா)

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை இலங்கை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியா வலியுறுத்தியுள்ளது.

அதன் காரணமாகவே அரசாங்கம் அண்மையில் மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் அறிவித்தது. ஆனால் எமக்கு கிடைத்துள்ள தகவல்களின் அடிப்படையில் மாகாணசபை தேர்தல் நடத்தப்படுமா என்பது சந்தேகத்திற்குரியதாகும் என்று பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

பெரும்பான்மை இருப்பின் ஒளிய வேண்டிய அவசியமில்லை - லக்ஷ்மன் கிரியெல்ல |  Virakesari.lk

கொழும்பிலுள்ள எதிர்கட்சி தலைவர் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் ,

தற்போது மாகாணசபை தேர்தல் தொடர்பில் கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. எனினும் எமக்கு கிடைத்துள்ள தகவல்களின் அடிப்படையில் மாகாணசபை தேர்தல் நடத்தப்படுமா என்ற சந்தேககம் எழுந்துள்ளது.

ஐக்கிய நாடுகளை சபையை சமாளிப்பதற்காகவே மாகாணசபை தேர்தல் தொடர்பில் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.

13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை இலங்கை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று ஐ.நா.வில் இந்தியா அழுத்தம் பிரயோகித்துள்ளது. இதன் காரணமாகவே மாகாணசபை குறித்து அரசாங்கம் அறிவித்தது.

ஆனால் அரசாங்கம் தேர்தலை நடத்தும் நிலைப்பாட்டில் இல்லை. இதன் காரணமாகவே தேர்தலை காலம் தாழ்த்துவதற்காக புதிய அரசியலமைப்பு உருவாக்கத்திற்கான செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

பாராளுமன்ற தெரிவுக்குழுவினூடாகவே புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும். ஆனால் தற்போது அரசாங்கத்திற்கு சார்பான சட்டத்தரணிகள் ஊடாக அரசியலமைப்பை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது முறையற்ற செயற்பாடாகும். 13 ஆவது திருத்தம் தொடர்பில் அரசாங்கத்திற்குள் இனக்கப்பாடு எட்டப்படவில்லை. அரசாங்கத்திற்குள்ளும் இனக்கப்பாடு இன்றியே புதிய அரசியலமைப்பு உருவாக்கத்திற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இவ்வாறிருக்கையில் எவ்வாறு எம்மால் யோசனைகளை முன்வைக்க முடியும் ? இந்த முறைமையை நாம் எதிர்க்கின்றோம் என்றார்.

இதன் போது அரசியல் பழிவாங்கல் மற்றும் உயிர்த்த ஞாயிறு ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுக்களின் அறிக்கை தொடர்பில் கருத்து தெரிவித்த அவர் ,

தகவல்களை சேகரிப்பதற்காகவே அரசியல் பழிவாங்கல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு நியமிக்கப்பட்டது. மாறாக வழக்கு தீர்ப்பு வழங்குவதற்கல்ல.

இந்த ஆணைக்குழுவால் பரிந்துரைகளை மாத்திரமே முன்வைக்க முடியும். சட்டமா அதிபரே சட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பார். நீதிமன்றத்தின் தீர்ப்புக்களை இவ்வாறான ஆணைக்குழுக்களால் மாற்ற முடியாது. மாற்ற முற்பட்டால் அது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயற்பாடாகும்.

மக்களால் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளைக் கொண்ட பாராளுமன்றத்தினால் அரசியலமைப்பின் ஊடாக நீதிமன்றத்துக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை சவாலுக்குட்படுத்த வாய்ப்பளிக்க முடியாது.

எனவே இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி ஐக்கிய மக்கள் சக்தியின் 40 பாராளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டு பிரதம நீதியரசரிடம் கோரிக்கையொன்றை கையளித்துள்ளோம்.

இதே போன்று 5 பாகங்களைக் கொண்ட உயிர்த்த ஞாயிறு தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையில் முதல் பாகம் மாத்திரமே பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

சட்டமா அதிபரிடமும் முழுமையான அறிக்கை சமர்ப்பிக்கப்படவில்லை. இது அரசாங்கத்தின் தனிப்பட்ட சொத்து கிடையாது. எனவே முழுமையான அறிக்கையை சட்டமா அதிபரிடம் கையளிக்குமாறு வலியுறுத்துகின்றோம் என்றார்.