(எம்.மனோசித்ரா)

கத்தோலிக்க பூமியில் சடலங்களை அடக்கம் செய்ய தீர்மானித்து மீண்டும் பிரச்சினைகளை தோற்றுவிக்க அரசாங்கம் முயற்சிக்கிறது.

ஆனால் இவ்வாறான செயற்பாடுகளில் ஏமாறுமளவிற்கு கத்தோலிக்க மக்களும் முஸ்லிம் மக்களும்  முட்டாள்கள் அல்ல என்று பாராளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் சர்ச்சைக்கு ஓரிரு தினங்களில்  தீர்வு: ஹரின் பெர்னாண்டோ | Virakesari.lk

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் ,

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் போது கத்தோலிக்க மக்களுக்கும் முஸ்லிம் மக்களுக்கும் இடையில் முரண்பாடுகளை தோற்றுவிக்க முயற்சித்தததைப் போலவே , தற்போதும் கத்தோலிக்க பூமியில் சடலங்களை அடக்கம் செய்ய தீர்மானித்து.

மீண்டும் பிரச்சினைகளை தோற்றுவிக்க அரசாங்கம் முயற்சிக்கிறது. ஆனால் கத்தோலிக்க மக்களும் முஸ்லிம் மக்களும் அவ்வாறான முட்டாள்கள் அல்ல.

2013 ஆம் ஆண்டிலிருந்து உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை மேற்கொள்ளும் வரை சஹரானை பாதுகாத்தது யார் என்ற தகவல்கள் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையில் வெளிப்படுத்தப்பட வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாகும். இந்த எதிர்பார்ப்புக்கள் நிறைவேற்றப்படாமை கவலைக்குரியதாகும்.

எனவே தற்போது சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கையால் திருப்தியடைய முடியாது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தற்போதைய அரசாங்கத்தின் தேவைக்காகவே முன்னெடுக்கப்பட்டது என்று கூறப்படுகிறது.

அவ்வாறு எதுவும்  இல்லை என்று நிரூபிப்பதற்காவது அரசாங்கம் முயற்சிக்க வேண்டும். ஆனால் தாக்குதல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நியாயத்தை இறைவனிடமே கேட்க வேண்டும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

தாக்குதல்கள் இடம்பெற்ற போது அதுகுறித்த தகவல்களை அறிந்திருக்காதவன் என்ற வகையில் நான் வெட்கமடைகின்றேன். முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் இது தொடர்பில் அறிந்திருக்கவில்லை. ஆனால் தற்போது அது பிரச்சினையல்ல என்றார்.