(எம்.ஆர்.எம்.வசீம்)

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கை தொடர்பாக எதிர்க்கட்சியினால் பாராளுமன்றத்தில் 3 நாள் விவாதம் கோரியிருந்த போதும் ஒரு நாள் மாத்திரம் விவாதிக்க கட்சி தலைவர்கள் கூட்டத்தின்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்றம் எதிர்வரும் 9ஆம் திகதி கூடவுள்ள நிலையில் அந்த வாரத்துக்கான சபை நடவடிக்கைகள் தொடர்பாக ஆராயும் கட்சி தலைவர்களின் கூட்டம் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் இன்று  இடம்பெற்றுள்ளது.

இதன்போதே உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கை தொடர்பான பாராளுமன்ற விவாதத்தை எதிர்வரும் 10 ஆம் திகதி புதன்கிழமை ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஆளும் கட்சியினால் முன்வைக்கப்படும் சபை ஒத்திவைப்பு பிரேரணையாக உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணை அறிக்கையை முற்பகல் 11 மணி முதல் பிற்பகல் 5.30 மணி வரை விவாதத்துக்கு எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தஸநாயக்க தெரிவித்தார்.

இதேவேளை, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கை கடந்த மாதம் 23ஆம் திகதி சபாநாயகருக்கு கையளிக்கப்பட்டதை அடுத்து, மறுநாள் 24ஆம் திகதி அமைச்சர் தினேஷ் குணவர்த்தன அதனை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பித்திருந்தார்.

சபை முதல்வரான அமைச்சர் தினேஷ் குணவர்த்தன அறிக்கையை சபைக்கு சமர்ப்பிப்பதாக அறிவித்ததை தொடர்ந்து, எதிர்க்கட்சி பிரதமகொறட லக்ஷ்மன் கிரியெல்ல எழுந்து, குறித்த விசாரணை அறிக்கை தொடர்பாக பாராளுமன்றத்தில் 3நாள் விவாதம் தேவை. அதனை வழங்கவேண்டும் என கேட்டுக்கொண்டார்.

அதற்கு சபாநாயகர் கட்சி தலைவர்கள் கூட்டத்தில் இதுதொடர்பாக கலந்துரையாடி விவாதத்துக்குரிய நாட்களை பெற்றுக்கொள்ளலாம் என பதிலளித்திருந்தார்.

இந்நிலையிலேயே இன்று பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய கட்சி தலைவர்களின் குழுக் கூட்டம் சபாநாயகர் தலைமையில் கூடியபோது, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கை தொடர்பான பாராளுமன்ற விவாதத்துக்கு எதிர்வரும் 10ஆம் திகதி ஒருநாள் மாத்திரம் வழங்க தீர்மானிக்கப்பட்டிருக்கின்றது.