இளம் கவிஞர் அஹ்னாபுக்கு சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் விவகாரத்துடன் தொடர்பில்லை - சி.ஐ.டி. அறிவிப்பு

By T Yuwaraj

04 Mar, 2021 | 09:51 PM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

" நவரசம்" என்ற கவிதைத் தொகுப்பு புத்தகத்தை எழுதியமைக்காக  கைது செய்யப்பட்டு நீண்டகாலம் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள அஹ்னாப் ஜஸீம் என்ற இளைஞர், சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் சந்தேக நபர் இல்லை என சி.ஐ.டி. கோட்டை நீதிவான் நீதிமன்றுக்கு அறிவித்துள்ளது. 

Articles Tagged Under: சி.ஐ.டி பணிப்பாளர் | Virakesari.lk

இதற்கு முன்னர் அஹ்னாப் ஜஸீமை, ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் தொடர்புடைய விவகாரத்தில் சந்தேக நபராக அறிவித்து சி.ஐ.டி. மன்றுக்கு அறிக்கை சமர்ப்பித்திருந்தது.

 இந் நிலையில் நேற்று நீதிமன்றில் இந்த விடயம் தொடர்பில் விபரித்த பிரதி சொலிசிட்டர் ஜெனரால் திலீப பீரிஸ், ' அஹ்னாப் ஜஸீம், ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் விவகாரத்தில் சந்தேக நபர் இல்லை என தெரிவித்தார். 

அத்துடன் ஏற்கனவே அவரது பெயரை சி.ஐ.டி. மன்றில் சந்தேக நபராக சில அறிக்கைகளில் குறிப்பிட்டிருந்த நிலையில், நேற்று முன்வைத்த மேலதிக அறிக்கையின் 4 ஆம் பந்தி ஊடாக, அவரை குறித்த வழக்கின் சந்தேக நபர் இல்லை என்பதை அறிவித்துள்ளதாகவும் திலீப பீரிஸ் சுட்டிக்காட்டினார்.

எவ்வாறாயினும்,  அஹ்னாப் ஜஸீம் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவின் தடுப்புக் காவலின் கீழ் உள்ளதாக குறிப்பிட்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரால் திலீப பீரிஸ்  கொழும்பு மேலதிக நீதிவான் நீதிமன்றில் உள்ள  பீ. 11230/20 எனும் வழக்கில் அவரை விசாரித்து வருவதாக தெரிவித்தார்.

இது குறித்த விசாரணைகளை பயங்கரவாத புலனாய்வுப் பிரிவின் உதவி பொலிஸ்  அத்தியட்சர் லசந்த ரத்நயக்கவின் கீழ் பிரதான பொலிஸ்  பரிசோதகர் பத்திரண, பொலிஸ் பரிசோதகர் ரன்ஜித் உள்ளிட்ட குழுவினர் முன்னெடுத்துள்ளனர். அவர்களும்  நேற்று  நீதிமன்றில் ஆஜராகியிருந்தனர்.

ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல்களை தொடர்ந்து விசாரணைகளை முன்னெடுக்கும் சி.ஐ.டி., சட்டத்தரணி ஹிஜாஸ்  உமர் ஹிஸ்புல்லாஹ்வை கைது செய்திருந்தது. அவருடன் தொடர்புடைய விவகாரத்தில்  இளம் கவிஞரான  அஹ்னாப் ஜஸீம் என்பவரை கடந்த 2020 மே 16 ஆம் திகதி சி.ஐ.டி. கைது செய்தது. அது முதல் இதுவரை அவரை தடுத்து வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right