(செ.தேன்மொழி)

தனிமைப்படுத்தல் சட்டவிதிகளுக்கு புறம்பாக செயற்பட்டதாக கைது செய்யப்பட்ட 3,286 சந்தேக நபர்களில், 3,200 பேருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

தனிமைப்படுத்தல் சட்டவிதிகளுக்கு புறம்பாக செயற்பட்டதாக இன்று காலை ஆறுமணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலத்திற்குள் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இந்நிலையில், கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதி முதல் இதுவரையில் 3,286 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களுள் 3200 பேருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

இதேவேளை, தற்போது சாதாரண தர பரீட்சை இடம்பெற்று வருகின்றது. 

இதன்போது தனிமைப்படுத்தல் சட்டவிதிகளுக்கு புறம்பாக சிலர் செயற்பட்டு வருவதாக தெரியவந்துள்ளது. 

அதற்கமைய,  தனியார் வகுப்பு நிலையங்களிலிருந்து பரீட்சையில் தோற்றிவரும் மாணவர்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. 

இதன்போது பரீட்சையில் தோற்றும் மாணவர்கள் அது முடிவுற்றதன் பின்னர் வெளியில் வரும்போது, இந்த தனியார் வகுப்புகளினால் அனுப்பட்டுள்ள ஊழியர்களினால் துண்டுபிரசுரங்கள் வழங்கி வைக்கப்படுகின்றன.

இதன்காரணமாக வைரஸ் பரவல் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகமாக காணப்படுவதுடன், மாணவர்களின் பாதுகாப்பிற்கும் பாதிப்பு ஏற்படும். அதனால் இத்தகைய செயற்பாடுகளை தவிர்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம். 

இதேவேளை இத்தகைய நபர்கள் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்காக பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார்.