( எம்.மனோசித்ரா )

கொவிட் தொற்றால் உயிரிழப்பவர்களின் சடலங்களை அடக்கம் செய்வதற்கு பொருத்தமான 6 இடங்கள் வைத்தியத்துறை நிபுணர்களால் பரிந்துரைக்கப்பட்டுள்ள போதிலும் , அவற்றை கவனத்தில் கொள்ளாது இரணைதீவில் அடக்கம் செய்ய தீர்மானித்துள்ளதன் மூலம் அரசாங்கம் திட்டமிட்டு இனங்களுக்கிடையில் பிரச்சினையை தோற்றுவிக்க முயற்சிக்கிறது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கபிர் ஹசிம் தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,

கொவிட் தொற்றால் உயிரிழப்பவர்களின் சடலங்களை இரணை தீவில் அடக்கம் செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இது திட்டமிட்டு இனங்களுக்கிடையில் முருகலை ஏற்படுத்தும் செயற்பாடாக இருக்கக் கூடும். அனைவர் மத்தியிலும் பிரிவினைவாதத்தை உருவாக்குவதே இந்த அரசாங்கத்தின் நோக்கமாகும்.

தற்போது சடலங்களை அடக்கம் செய்வதற்கு பொருத்தமான 6 இடங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிந்துரைக்கப்பட்டுள்ளன. அரசாங்கத்துடன் தொடர்புடைய விஷேட நிபுணர்களிடம் இது தொடர்பில் கலந்தாலோசித்து தீர்வினைக் காண முடியும்.

ஆனால் அதற்கான நடவடிக்கையை முன்னெடுக்காது , இவ்வாறான இடத்தை  தெரிவு செய்துள்ளமையானது அரசாங்கத்தால் திட்டமிட்டு பிரச்சினை உருவாக்குவதற்கு முன்னெடுக்கப்படும் முயற்சியாகும்.

உள்நாட்டிலுள்ள சாதாரண பிரச்சினைகளையே தீர்த்துக் கொள்ள முடியாத அரசாங்கத்திற்கு எவ்வாறு சர்வதேசத்தின் மத்தியில் காணப்படும் பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ள முடியும் ? முன்னெடுத்த அனைத்து செயற்பாடுகளிலும் அரசாங்கம் தோல்வியடைந்துள்ளது என்பது இதன் மூலம் தெளிவாகிறது. தாம் தோல்வியடைந்துள்ளோம் என்பதை முழு உலகிற்கும் அரசாங்கம் காண்பித்துள்ளது என்றார்.

இதன் போது கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாகீர் மாகார், கொவிட் தொற்றால் உயிரிழப்பவர்களின் சடலங்களை அடக்கம் செய்யும் விவகாரத்தில் உலக சுகாதார ஸ்தாபனம் வழங்கிய வழிகாட்டல்களை பின்பற்றாத நாடு இலங்கை மாத்திரமேயாகும்.

சுமார் ஒரு வருடமாக முஸ்லிம் மக்களுக்கு மனக்கஷ்டத்தை ஏற்படுத்தி தற்போது சடலங்களை அடக்கம் செய்ய அரசாங்கம் தீர்மானித்திருக்கிறது.

தற்போது இரணை தீவில் அடக்கம் செய்வதற்கு தீர்மானித்துள்ளதாககக் கூறப்பட்டுள்ள நிலையில் , அங்குள்ள மக்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாகக் கூறப்படுகிறது.

உலகளவில் ஏற்றுக் கொள்ளப்பட்ட விஷேட வைத்திய நிபுணர்களின் ஆலோசனைகளையோ, உள்நாட்டு வைத்திய நிபுணர்களின் ஆலோசனைகளையோ ஏற்றுக்கொள்ளாமல் இந்த அரசாங்கம் அதன் போக்கில் செயற்பட்டது.

ஆளுந்தரப்பிலிலுள்ள பெரும்பாலான உறுப்பினர்கள் முஸ்லிம் சமூகத்தினரை சந்திப்பதற்கு கூட தாம் வெட்கப்படுவதாக எம்மிடம் தனிப்பட்ட ரீதியில் தெரிவித்தனர் என்றார்.