(எம்.மனோசித்ரா)

இலங்கை விமானப்படையின் 70 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு நேற்று புதன்கிழமை இலங்கை , இந்திய விமானப்படையினரால் வான்படை சாகசங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. 

நேற்று மாலை 5 மணிக்கு காலி முகத்திடலில் ஆரம்பமான விமானப்படையினரின் வான்படை சாகசங்கள் வான் பரப்பை அதிர வைத்தன.

நேற்றைய ஆரம்ப நிகழ்வில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ , பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்தன மற்றும் விமானப்படை தளபதி எயா மார்ஷல் சுதர்ஷன பதிரண, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். 

அத்தோடு முப்படைகளின் தளபதிகள், பொலிஸ்மா அதிபர் உள்ளிட்டோரும் கலந்துக் கொண்டனர்.

இந்த விமானப்படை சாகசத்தில் 24 இலங்கை விமானங்களும், 23 இந்திய விமானங்களும் பங்குபற்றின. 

சுமார் ஒரு மணித்தியாலயம் நடைபெற்ற வான்படை சாகசத்தை நூற்றுக்கணக்கான பொது மக்கள் காலி முகத்திடல் வளாகத்திலிருந்து பார்வையிட்டனர். 

1951 ஆம் ஆண்டு மார்ச் 2 ஆம் திகதி 6 அதிகாரிகள், 21 வீரர்களுடன்  இலங்கை விமானப்படை ஸ்தாபிக்கப்பட்டு நேற்று 70 ஆவது ஆண்டு நிறைவு கொண்டாடப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.