(எம்.மனோசித்ரா)
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் 1000 ரூபா நாளாந்த சம்பள அதிகரிப்பு தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் தொழில் ஆணையாளர் நாயகத்தினால் வெளியிடப்படும் என தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

அமைச்சர் மேலும் கூறுகையில், பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் தொழிற்சங்கங்களுக்கும் கம்பனிகளுக்கும் இடையில் சுமார் 14 சுற்று பேச்சு வார்த்தைகள் இடம்பெற்றுள்ளன. இதன்போது அனைத்து சந்தர்ப்பங்களிலும் கம்பனிகள் சம்பள அதிகரிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு, பல நிபந்தனைகளை முன்வைத்து 1000 ரூபாவை வழங்காமலிருக்க முயற்சித்தன. எனினும் பெப்ரவரி 8 ஆம் திகதி சம்பள நிர்ணய சபையில் 1000 ரூபா சம்பளம் உறுதி செய்யப்பட்டது.

1000 ரூபாய் நாளாந்த சம்பள அதிகரிப்பு கோரிக்கை கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னரே முன்வைக்கப்பட்ட போதிலும் , தற்போதைய அரசாங்கத்தினால் அதனைப் பெற்றுக் கொடுக்க முடிந்தமையை பாரிய வெற்றியாகவே கருதுகின்றோம். பொதுஜன பெரமுனவின் தேர்தல் பிரசாரத்தில் வழங்கப்பட்ட வாக்குறுதி நிறைவேற்றப்பட்டுள்ளது.

பெருந்தோட்ட மக்களை வாழ்க்கை நிலையில் உயர்த்துவதற்கான நடவடிக்கையாக சம்பள அதிகரிப்பு காணப்படுகிறது. இந்த தீர்மானத்தின் மூலம் சுமார் 2 இலட்சம் பெருந்தோட்ட தொழிலாளர்களால் நாட்டின் பொருளாதாரம் மேலும் முன்னேற்றமடையும் என்றார்.