(இராஜதுரை ஹஷான்)

இஸட் (Z) புள்ளி அடிப்படையில் பல்கலைகழகத்துக்கு தெரிவாகாத உயர்தரத்தில் சித்தியடைந்த மாணவர்களை கொத்தவாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்துக்கு இணைத்துக் கொள்ளும் யோசனையை அமைச்சரவையில் முன்வைக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கல்வி அமைச்சருக்கு ஆலோசனை வழங்கினார்.

சுபீட்சமான இலக்கு கொள்கை திட்டத்திற்கமைய .இம்முறை பல்கலைக்கழகத்துக்கு மேலதிகமாக இணைத்துக் கொள்ளவுள்ள மாணவர்களுக்கு இணையாக பல்கலைக்கழக  வளங்களை மேம்படுத்தும்  மேலதிக திட்டங்களை தயார்படுத்துமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு பிரதமர் அறிவுறுத்தினார்.

 அலரி மாளிகையில் இடம்பெற்ற பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குவின் அதிகாரிகள், பல்கலைக்கழக வேந்தர்கள் ஆகியோருக்கு இடையிலான பேச்சுவார்த்தையின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

கலந்துரையாடல் தொடர்பில் பிரதமர் ஊடக்பிரிவு மேலும் தெரிவித்துள்ளதாவது :

இவ்வருடம் பல்கலைக்கழகத்துக்கு 41000 பேர் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்கள். இவர்களின் 10588 மாணவர்கள் மேலதிகமாக இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்கள்.

சுதந்திரத்துக்கு பின்னர் இவ்வருடமே அதிகளவிலான மாணவர்கள் பல்கலைக்கழகத்தக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சம்பத் அமரதுங்க தெரிவித்தார். இதற்கமைய வைத்திய பீடத்துக்கு மாத்திரம் 479 மாணவர்கள் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்கள் எனவும் குறிப்பிட்டார்.

அனைத்து பல்கலைக்கழகங்களின் வேந்தர்களின் வழிகாட்டலுக்கு அமைய இம்முறை மேலதிகமாக 10588 மாணவர்கள் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்கள். பல்கலைக்கழக பௌதீக மற்றும் மனித வள முகாமைத்துவத்துக்கு 5 பில்லியன் நிதி மேலதிகமாக தேவைப்படுகிறது.

பல்கலைக்கழக மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகளுக்காக தற்போது வழங்கப்படும் நிதி  வரைபுக்கு மேலதிகமாக கட்டம் கட்டமாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு வழங்குமாறு  குறிப்பிட்ட பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இவ்விடயம் தொடர்பில் மத்திய திறைசேரி,பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு இணைந்து ஒரு திட்டத்தை தயாரிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

கொவிட்-19 வைரஸ் தாக்கத்துக்கு மத்தியில் பல்கலைக்கழக கற்றல் நடவடிக்கைகள் சிறந்த முறையில் முன்னெடுக்கப்படுகின்றன.வைரஸ் தாக்கத்தை காரணம் காட்டி பல்கலைகழகங்களை மூட வேண்டிய தேவை இனியொருபோதும் தோற்றம் பெறாது என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்தார்.

உயர்தர பரீட்சையில் அதிவிசேடமாக சித்தியடைந்து பல்கலைக்கழகத்துக்கு தெரிவு செய்யப்படாத மாணவர்கள் குறித்து விசேட நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீறிஸ் தெரிவித்தார்.

இதற்கு தீர்வாக அரசாங்கம் மாளியங்கள் வழங்குமாயின்  இம்மாணவர்களை கொத்தவாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்துக்கு இணைத்துக் கொள்ள முடியும் என என கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் உப வேந்தர் மேஜர் ஜெனரால் மிலிந்த பீறிஷ் தெரிவித்தார்.இதற்கான அமைச்சரவை பத்திரத்தை அமைச்சரவையில் சமர்ப்பிக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கல்வி அமைச்சருக்கு ஆலோசனை வழங்கினார்.