மஸ்கெலியா சாமிமலை ஓல்டன் தோட்ட தொழிலாளர்கள் கடந்த 25 நாட்களுக்கு மேலாக தங்களது உரிமையை வலியுறுத்தி கோரிக்கைகளை முன்வைத்து மனம் தளராது போராடி வருகின்றனர்.

தோட்ட தொழிலாளர்களின் ஆயிரம் ரூபா சம்பள உயர்வு தொடர்பாக கம்பனிகளுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் கடந்த மாதம் 5 ஆம் திகதி நாடாளவீய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட முழு அடைப்பு போராட்டத்திற்கு இ.தொ.கா அழைப்பு விடுத்திருந்தது.

அதேநேரத்தில் ஓல்டன் தோட்டத்தில் தோட்ட நிர்வாக அதிகாரிகள் தொழிற்சாலையில் பொதி செய்யப்பட்டிருந்த தேயிலை தூளை ஏற்று செல்வதற்கான நடவடிக்கையில் ஈடுப்பட்டிருந்தனர்.

இதனை தடுத்த தொழிலாளர்களின் இருவர் தோட்ட அதிகாரியால் தாக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இத் தாக்குதலை எதிர்த்து ஓல்டன் தோட்டத்திற்கு உரிய நான்கு  பிரிவுகளை சேர்ந்த தொழிலாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து தோட்ட தொழிலாளர்களுக்கும், தோட்ட நிர்வாக அதிகாரிகளுக்கும் இடையில் ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பாக 8 தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர்.

இதில் 7 பேர் பெண்கள் எனவும், ஒருவர் ஆண் எனவும் தெரியவந்துள்ளது. அதேநேரத்தில் மஸ்கெலியா பொலிஸாரால் அட்டன் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட இவர்கள் 14 நாட்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்ட பின் இன்று (03.03.2021) அட்டன் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டனர்.

அதேநேரத்தில் இவர்களை மீண்டும் எதிர்வரும் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கும்படி அட்டன் நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும், ஓல்டன் தோட்டத்தில் இடம்பெற்ற தோட்ட அதிகாரிக்கு எதிரான தாக்குதல் சம்பவம் தொடர்பில் மேலும் ஐவர் நேற்று மாலை கைது செய்யப்பட்டு அதில் இருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டதுடன், மூவருக்கு ஒரு இலட்சம் ரூபாய் சரீர பிணை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.

அதேநேரத்தில் இது தொடர்பில் இன்று (03.03.2021) நீதிமன்ற வளாகத்தில் தொழிலாளர்களை வினவிய போது,

தமக்கு நீதி வேண்டும் எனவும், இந்த தாக்குதல் சம்பவம் தோட்ட அதிகாரியால் ஆரம்பிக்கப்பட்டதால் அவரை முதலில் கைது செய்யும்படி வலியுறுத்துவதாகவும் தொழிலாளர்கள் தெரிவித்தனர்.