(எம்.ஆர்.எம்.வசீம்)
மனித உரிமை மீறல் தொடர்பாக ராஜபக்ஷ் அரசாங்கம் பன்கீ மூனுடன் செய்துகொண்ட கூட்டு பிரகடனத்தில் இருந்து அரசாங்கத்துக்கு தப்பிச்செல்ல முடியாது. அதனால் நாடு என்றவகையில் இதற்கு முகம்கொடுத்து, மனித உரிமை மீறல் இடம்பெறவில்லை என்பதை உறுதிப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என ஐக்கிய தேசிய கட்சி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஆசுமாரசிங்க தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை இலங்கைக்கு எதிராக கொண்டுவந்துள்ள பிரேரணை தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சியின் நிலைப்பாடு தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

நாட்டில் மனித உரிமை மீறப்பட்டிருந்தால் அதுதொடர்பில் விசாரணை மேற்கொள்ளத்தயார் என ராஜபக்ஷ் அரசாங்கமே ஆரம்பமாக கூட்டு பிரகடம் ஒன்றை வெளியிட்டது. ஐக்கிய நாடுகள் அமைப்பின் முன்னாள் செயலாளர் பான் கீமூனுடன் இணைந்து வெளியிட்ட அறிக்கையின் அடிப்படையிலேயே எமது அரசாங்கம் 2015 இல் மனித உரிமை மீறல்தொடர்பான மனித உரிமை ஆணைக்குழுவின் பிரேரணையை ஏற்றுக்கொண்டு நடவடிக்கை எடுத்திருந்தது. அவ்வாறு இல்லாமல் எமது நாட்டில் மனித உரிமை மீறப்பட்டிருப்பதை ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் தானாக ஏற்றுக்கொள்ளவில்லை.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் பிரேரணையில் கைச்சாத்திட்டுள்ள இந்த அரசாங்கத்துக்கு, அதிலிருந்து தப்பிச்செல்ல முடியாது. இந்த விடயம் தொடர்பாக முகம்கொடுத்து தீர்த்துக்கொள்ளவேண்டிய பிரச்சினையாகும். அவ்வாறு இல்லாவிட்டால் தொடர்ந்து இந்த பிரச்சினை எங்களுக்கு வந்துகொண்டிருக்கும். எமது நாட்டில் மனித உரிமை மீறப்படவில்லை. அதனால்தான் நாங்கள் கூட்டு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டுள்ளோம். 

அத்துடன் இராணுவத்தினரால் அல்லது அதிகாரிகளால் ஏதாவது தவறு ஏற்பட்டிருந்தால், அந்த தவறை சரி செய்யவேண்டும். அதுதான் இடம்பெறவேண்டியது. அந்த தவறை செய்வது இராணுவத்தினராகவோ அரசாங்கமாகவோ அல்ல. மாறாக தனி நபர்களால் ஏற்பட்ட தவறுகளாகவே நாங்கள் அதனை கண்டுவந்தோம். இராணுவ அதிகாரியோ அல்லது அரச அதிகாரியோ தவறு செய்திருந்தால் அந்த குற்றம் சுமத்தப்படுவது அந்த நபருக்காகும். அவ்வாறில்லாமல் ஒட்டுமொத்தமாக அந்த துறைக்கு அல்ல. ஆனால் இதனை இனவாதமாக சித்தரித்து, இராணுவத்துக்கு அல்லது பொலிஸாருக்கு எதிராக மேற்கொள்வதாக பிரசாரம் மேற்கொண்டு பிழையான தீர்மானத்துக்கு வந்தோம். 

எனவே இந்த தவறான தீர்மானத்தை சரிசெய்யவேண்டிய பொறுப்பு, ஆரம்பமாக இருப்பது ராஜபக்ஷ் அரசாங்கத்துக்காகும் என்றார்.