(எம்.மனோசித்ரா)
கொழும்பு - டாம் வீதியில் பயணபைக்குள்ளிருந்து மீட்கப்பட்ட சடலம் தொடர்பான விசாரணைகளில், பாலியல் குற்றம் எதுவும் பதிவாகவில்லை. எனினும் இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் 4 நாட்கள் விடுமுறையில் சென்றுள்ளமைக்கமைய இக்கொலை திட்டமிட்டு இடம்பெற்றிருக்கலாம் என்ற சந்தேகத்தினடிப்படையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கொழும்பு மத்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஷாந்த சந்திரசேகர தெரிவித்தார்.

குறித்த சந்தேகநபர் தங்கியிருந்த விடுதியிலிருந்து ஹங்வெல்ல பஸ் தரிப்பிடத்திற்கு சென்ற முச்சக்கர வண்டியிலிருந்து இரத்த மாதிரிகள் பெற்றப்பட்டுள்ளதாகவும், அதனை அடிப்படையாகக் கொண்டும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் நிஷாந்த சந்திரசேகர தெரிவித்தார்.

பொலிஸ் தலைமையகத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் குறித்த சம்பவம் தொடர்பில் அவர் தொடர்ந்தும் தெளிவுபடுத்துகையில், இம்மாதம் முதலாம் திகதி மாலை 2.30 மணியளவில் கொழும்பு - டாம் வீதியில் சந்தேகத்திற்கிடமான பயணப்பையொன்று இருப்பதாக கிடைத்த தகவலுக்கமை 2.50 மணியளவில் குறித்த பயணப்பையில் தலையற்ற பெண்ணொருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. உடலில் தலை அகற்றப்பட்டிருந்ததால்  இரத்தம் கசியாமல் இருப்பதற்காக  சந்தேகநபரால் மிகவும் சூட்சுமமான முறையில் பொலித்தீன் உறையில் கழுத்து பகுதி மூடப்பட்டு சடலம் பையில் வைக்கப்பட்டுள்ளது.

மீட்க்கப்பட்ட பயணப்பையை கொண்டு செல்லும் சந்தேகநபர் கொழும்பில் நடமாடிய பகுதிகளிலுள்ள கடைகள் உள்ளிட்டவற்றிலிருந்து பெறப்பட்ட சி.சி.டி.வி. காணொளி பதிவுகளின் மூலம் அவர் ஹங்வெல்ல - கொழும்பு பேரூந்தில் பயணித்துள்ளமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இதே போன்று ஹங்வெல்ல பகுதியில் சந்தேகநபரின் நடமாட்டம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் ஊடாக அவர் முச்சக்கரவண்டியொன்றில் பயணித்துள்ளமை தெரியவந்துள்ளது.

குறித்த முச்சகரவண்டி அடையாளங் காணப்பட்டுள்ளதோடு அதன் சாரதியிடமும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன. அத்தோடு முச்சகரவண்டியிலிருந்து இரத்த மாதிரிகள் பெறப்பட்டுள்ளன. பெறப்பட்ட இரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. சடலமாக மீட்கப்பட்ட பெண்னின் சகோதரன் மற்றும் தாயின் மாதிரிகளைப் பெற்று டி.என்.ஏ. பரிசோதனை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. டி.என்.ஏ. பரிசோதனையில் கிடைக்கப் பெறும் முடிவுகளுக்கு அமைய சடலமாக மீட்கப்பட்ட பெண்னுடையதாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும்.  ஹங்வெல்ல பஸ் தரிப்பிடத்தில் மீட்கப்பட்ட ஆடைகள் அவருடையதாக என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள முடியும்.

கொல்லப்பட்ட பெண் மற்றும் சந்தேகநபர் ஆகிய இருவரும் பெப்ரவரி 26 ஆம் திகதி இரவு 10 மணிக்கு ஹங்வெல்லவிலுள்ள  விடுதியொன்றில் அறையை பதிவு செய்து அங்கு தங்கியுள்ளனர். மறுநாள் இவர்களிருவரும் விடுதியிலிருந்து வெளியில் சென்று வந்ததாகவும், அதன் பின்னர் இருவரும் ஒன்றாக வெளியேறியதை அவதானிக்கவில்லையென்றும் ஹோட்டல் ஊழியர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் போது தெரிவிக்கப்பட்டது. குறித்த சந்தேகநபர் இம்மாதம் முதலாம் திகதி விடுதியில் தங்கியிருந்த அறைக்கான முழு பணத்தையும் செலுத்தி அங்கிருந்து சென்றுள்ளார்.

விடுதிக்கு வரும் போது சந்தேகநபரிடம் காணப்படாத பயணப்பை வெளியில் செல்லும் போது இருந்தமைமை சந்தேகத்துடன் தாம் அவதானிக்கவில்லையென்றும் ஹோட்டல் ஊழியர்கள் தெரிவித்தனர். குறித்த பெண் சிவனடிபாதமலை செல்வதாகக் கூறி வீட்டிலிருந்து வெளியேறிய பின்னர் வீட்டிலுள்ளவர்களை தொடர்புகொள்ளவில்லை. தற்கொலை செய்து கொண்ட 52 வயதான  சந்தேகநபரின் தொலைபேசியைக் கொண்டு அவர் சென்றுள்ள இடங்கள் தொடர்பான தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. இவரது வசிப்பிடத்தில் பொலிஸார் தீவிர சோதனை நடத்திய போதிலும், அவர் சூட்சுமமாக மறைந்திருந்து அருகிலுள்ள ஆறொன்றில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதுவரை (இன்று மாலை 3 மணி) பெண்னின் தலை பகுதி மீட்கப்படவில்லை. சந்தேகநபர் முதுகில் மாட்டியிருந்த மற்றொரு பையில் தலை காணப்படலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர். இவர்களிருவரும் தங்கியிருந்த விடுதிக்கு சீல் வைக்கப்பட்டு தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இந்த விடுதியில் சி.சி.டி.வி. கமராக்கள் பொறுத்தப்படவில்லை என்பதால் அங்கிருந்து முக்கிய ஆதாரங்கள் எவையும் இதுவரையில் (இன்று வரை) கிடைக்கவில்லை. சந்தேகநபர் அவரது மனைவிக்கு எழுதியதாகக் கூறப்படும் கடிதம் மொனராகலை பொலிஸார் வசமுள்ளது. கடிதத்தில் கூறப்பட்டுள்ள விடயங்களும் விசாரணைகளின் போது கவனத்தில் கொள்ளப்படும்.

மடல்கும்பர பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட சந்தேகநபர் முந்தல பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றுபவராவார். 4 நாட்கள் விடுமுறையில் சென்றதன் பின்னர் இவர் பொலிஸ் நிலையத்திற்கு சமூகமளிக்கவில்லை. விடுமுறையில் சென்றமையை அடிப்படையாகக் கொண்டு இந்த கொலை திட்டமிட்டு இடம்பெற்றதாக இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன. தலையை அகற்றுவதற்காக பயன்படுத்தியிருக்கக் கூடிய ஆயுதம் அல்லது அவ்வாறான விடயங்கள் தொடர்பிலும் விசாரணைகள் இடம்பெறுகின்றன. துரிதமாக இந்த சம்பவத்தின் உண்மையான பின்னணி தொடர்பில் கண்டறிய முடியும் என்றார்.