-என்.கண்ணன்

“சீனா இலங்கையிடம் யுவான்களை கடனாக கொடுத்து, டொலர்களாகத் திருப்பி எடுத்துக் கொள்கிறது. இது சீனா தனது நாணயத்தை டொலர்களாக மாற்றிக் கொள்வதற்கு கையாளுகின்ற ஒரு தந்திரம்”

வெளிநாட்டு நாணயக் கையிருப்பு இல்லாமலும், வெளிநாட்டுக் கடன்களை திருப்பிச் செலுத்துவதிலும் இலங்கை அரசாங்கம் கடும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நிலையில், மற்றொரு பொறியை நோக்கி நாடு இழுத்துச் செல்லப்படுகிறது.

இலங்கையின் வெளிநாட்டு நாணயக் கையிருப்பு இந்த ஜனவரி மாதம் 4.8 பில்லியன் டொலர்களாக வீழ்ச்சியடைந்திருப்பதாக அரசாங்கம் கூறியிருக்கிறது.

கடந்த ஓகஸ்ட் மாதம் 7.4 பில்லியன் டொலர்களாக இருந்த இந்தக் கையிருப்பு, டிசெம்பரில் 5.7 பில்லியன் டொலர்களாக குறைந்திருந்தது. இந்த ஆண்டில் அது மோசமாக வீழ்ச்சியடைந்திருக்கிறது. 

வெளிநாட்டு நாணயக் கையிருப்பு நெருக்கடியைத் தீர்க்க சீனாவிடம் இருந்து 1.5 பில்லியன் டொலர்களையும், இந்தியாவிடம் இருந்து ஒரு பில்லியன் டொலர்களையும் நாணயமாற்றுக் கடனாக இலங்கை அரசாங்கம் கோரியிருந்தது.

இந்தியாவின் ரிசேவ் வங்கியிடம் இருந்து ஒரு பில்லியன் டொலர்கள் நாணய மாற்றுக் கடன் வசதியைப் பெற்றுக்கொள்வது இப்போதைக்குச் சாத்தியமில்லை என்று மத்திய வங்கி அதிகாரிகள் உறுதிப்படுத்தியிருக்கின்றனர்.

இந்தியாவுடனான உறவுகளில் அண்மையில் ஏற்பட்டுள்ள குழப்ப நிலையே இதற்குக் காரணம்.

அதேவேளை, சீனாவிடம் கோரப்பட்ட நாணயமாற்றுக் கடன் தொடர்பான  உடன்பாடு கடந்த வாரம் கையெழுத்திடப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், இதிலும் பிரச்சினைகள் உள்ளதாக தெரிகிறது.

சீனாவிடம் இலங்கை, 1.5 பில்லியன் டொலர்கள் நாணயமாற்றுக் கடனையே கோரியிருந்தது.

ஆனால், சீனா 1.5 பில்லியன் யுவான் நாணய பரிமாற்றுக் கடனையே வழங்க இணங்கியிருக்கிறது என்று கூறியிருக்கிறார் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.

அதாவது, டொலராக கொடுப்பதை தவிர்த்து, தமது நாட்டின் நாணயமான யுவானாக கொடுக்கவே சீனா முன்வந்திருக்கிறது.

சீனாவின் யுவானும் சர்வதேச கொடுக்கல் வாங்கல்களில் அங்கீகரிக்கப்பட்ட நாணயங்களில் ஒன்றாக இருந்தாலும், அதற்கு மதிப்புக் குறைவு.

எல்லா நாடுகளும், நிறுவனங்களும் சீன யுவான்களை சர்வதேசப் பரிமாற்றங்களில் ஏற்றுக் கொள்வதில்லை.

எனவே, இலங்கைக்கு கிடைக்கப்போகும் 1.5 பில்லியன் யுவான்கள், நாட்டின் வெளிநாட்டு நாணயக் கையிருப்பை அதிகரிக்கச் செய்யுமே தவிர, இதனைச் சர்வதேச வர்த்தகத் தேவைகளுக்காக அரசாங்கத்தினால் பயன்படுத்திக்கொள்வது இலகுவானதல்ல.

இலங்கைக்கு உதவுவதாக காட்டிக்கொள்ளும் சீனா, ஏதோ ஒரு வகையில் தனது பொருளாதார வலைக்குள் வீழ்த்துவதையே இலக்காக கொண்டிருக்கிறது.

இலங்கையை கடன்பொறிக்குள் தள்ளவில்லை என்று சீனா கூறினாலும், தாங்கள் சீனாவில் கடன் பொறியில் சிக்கவில்லை என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக் ஷ குறிப்பிட்டிருந்தாலும், உண்மை நிலை அதுவல்ல.

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2021-02-28#page-9

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க https://bookshelf.encl.lk/