(எம்.மனோசித்ரா)
கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையம் மாத்திரமல்ல, எந்தவொரு தேசிய சொத்தையும் வெளிநாடுகளுக்கு விற்பதற்கு அரசாங்கத்திற்கு  உரிமை கிடையாது. ஜெனிவாவில் இலங்கைக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடிகளை சமாளிப்பதற்காகவே அரசாங்கத்தால் இவ்வாறான தீர்மானங்கள் எடுக்கப்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர் கபிர் ஹசிம் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், நல்லாட்சி  அரசாங்கத்தில் கிழக்கு முனைய அபிவிருத்தி தொடர்பான இறுதி தீர்மானம் எடுக்கப்படாமல் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருந்த போதே , தொழிற்சங்கங்கள் ஊடாக தற்போதைய அரசாங்கம் எமக்கெதிராக ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்தது. இதன் போது தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட துறைமுக தொழிற்சங்கங்களை நேரடியாக சந்தித்து தேசிய சொத்துக்கள் எந்தவொரு நாட்டுக்கும் வழங்கப்பட மாட்டாது என்று வாக்குறுதியளித்தார்.

தேசிய சொத்துக்கள் வெளிநாடுகளுக்கு விற்கப்பட மாட்டாது என்பதும் அம்பாந்தோட்டை துறைமுகம் மீள பெறப்படும் என்பதே ஜனாதிபதித் தேர்தலின் போது பொதுஜன பெரமுனவின் பிரதான பிரசாரமாகக் காணப்பட்டது. இதனையே அவர்கள் பொது மக்களுக்கு வாக்குறுதியாகவும் வழங்கினர். ஆனால் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் எவையும் இன்று வரை நிறைவேற்றப்படவில்லை.

கிழக்கு முனைய விவகாரத்தில் துறைமுக தொழிற்சங்கங்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை மீறி செயற்பட அரசாங்கம் முயற்சித்தமையால் பாரிய எதிர்ப்புக்கள் வெளியாகின. கிழக்கு முனையத்தை இந்தியாவிற்கு வழங்க முடியாமல் போனது. அரசாங்கத்தின் இவ்வாறான செயற்பாடுகளால் இந்தியாவையும் பகைத்துக் கொள்ள வேண்டிய நிலைமை ஏற்பட்டது.

தற்போது மேற்கு முனையத்தை அரச - தனியார் கூட்டு அபிவிருத்தி அடிப்படையில் வழங்க தீர்மானித்துள்ளதாகக் கூறுகின்றனர். இவ்வாறு இந்தியாவிற்கும் சீனாவிற்கும் தேசிய சொத்துக்களை வழங்குவதன் உள் நோக்கம் ஜெனிவாவில் இலங்கைக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியை சமாளிப்பதற்காகவேயாகும். இவ்வாறு தேசிய சொத்துக்களை வெளிநாடுகளுக்கு விற்பதற்கான உரிமை அரசாங்கத்திற்கு கிடையாது என்றார்.