(இராஜதுரை ஹஷான்)
நிறுனங்களின் உள்ளக பிரச்சினைகளுக்கு  தீர்வு கண்டு அரச நிறுவனங்களுடனான  மக்கள் சேவையை வினைத்திறனான முறையில் முன்னெடுப்பது அவசியமாகும். நாட்டின் அபிவிருத்தி துறையில்  2015ஆம் ஆண்டுக்கு முற்பட்ட காலத்தில்  காணப்பட்ட  உத்வேகம் தற்போது மீண்டும் தோற்றம் பெற்றுள்ளது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையில் பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தாமதப்படுத்தப்பட்டுள்ள நிர்மாண அபிவிருத்தி பணிகள் குறித்து அவதானம் செலுத்தப்பட்டது. ஒரு சில நிறுவனங்களின்  உள்ளக பிரச்சினைகளும், நிறுவனங்களுக்கிடையிலான சேவை இடை வெளியும் ஒரு சில அபிவிருத்தி பணிகளின் தாமதத்துக்கு பிரதான காரணியாக சுட்டிக்காட்டப்பட்டது. இவ்வாறான பிரச்சினைகளை முறையாக கண்காணித்து தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு பிரதமர் ஆலோசனை வழங்கினார்.

சட்டவிரோத  குடியிறுப்புகளுக்கான  நடவடிக்கையெடுத்தல், குறைந்த வசதிகளை கொண்டுள்ள மக்களுக்கு வீடமைப்பு திட்டங்களை முன்னெடுத்தல், நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான நிலப்பரப்பில் அபிவிருத்திகளை முன்னெடுத்தல்  புனித தலங்கள், காணிகள் அபிவிருத்தி, மற்றும் வீடமைப்பு அமைச்சுக்கு சொந்தமான நிறுவனங்களில் நிலவும் பல பிரச்சினைகளுக்கு  பிரதமரால் தீர்வு வழங்கப்பட்டது.

வெலிகடை சிறைச்சாலை புனரமைப்பு, மாத்தறை, கோட்டை, மற்றும் கண்டி ஆகிய பிரதேசங்களிலுள்ள பேருந்து நிலையங்களை அபிவிருத்தி செய்யல் ஆகிய அபிவிருத்தி பணிகள் குறித்து பிரதமர் அவதானம் செலுத்தினார்.

அபிவிருத்தி நிர்மாண பணிகளில் போது அரச நிறுவனங்களுக்கிடையிலான உறவு பலமாக காணப்பட்டால் மக்களுக்கான சேவையை சிறந்த முறையில் முன்னெடுக்கலாம். 2015 ஆம் ஆண்டுக்கு முற்பட்ட காலத்தில் நாட்டின் அபிவிருத்தி பணிகளில் காணப்பட்ட உத்வேகம் தற்போது மீண்டும் தோற்றம் பெற்றுள்ளது என்றார்.