(எம்.ஆர்.எம்.வசீம்)
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான  ஜனாதிபதி ஆணைக்குழுவின்  விசாரணை அறிக்கையை அரசாங்கம் பொறுப்பேற்கமுடியாது எனில் கடந்த இரண்டு வருடங்களாக யாருடைய தேவைக்கு  அரசாங்கம் ஆணைக்குழு முன்னெடுத்தது என கேட்கின்றோம். அத்துடன் அரசியல் தலையீடுகள் எதுவும் இன்றி பொலிஸ் விசாரணை ஒன்றை மேற்கொண்டால் மக்கள் எதிர்பார்க்கும் பெறுபேற்றை பெற்றுக்கொள்ளலாம் என ஐக்கிய தேசிய கட்சியின் செயலாளர் பாலித்த ரங்கே பண்டார தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கையை அரசாங்கத்துக்கு பொறுப்பேற்க முடியாது எனவும் அது நல்லாட்சி  அரசாங்கத்தினால் அமைக்கப்பட்ட  ஆணைக்குழு  எனவும் அமைச்சர் கெஹலிய ரம்புக்வல தெரிவித்திருந்தார். ஆணைக்குழுவின் அறிக்கையை அரசாங்கத்துக்கு பொறுப்பேற்க முடியாது எனில், எதற்காக கடந்த இரண்டு வருடங்களாக ஆணைக்குழுவை விசாரணைக்கு அனுமதித்தது என கேட்கின்றோம். 

அத்துடன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான  இரண்டு இடைக்கால அறிக்கைகளை ஜனாதிபதி, ஆணைக்குழுவிடமிருந்து பொறுப்பேற்றிருந்தார். இந்த ஆணைக்குழுவுக்காக அரசாங்கமே நிதி செலவழித்தது. ஆணைக்குழுவின் அறிக்கையை பொறுப்பேற்கமுடியாது எனில், யாருடைய தேவைக்கு அதற்காக  பணம் செலவழித்தது?. நல்லாட்சி அரசாங்கத்தினால் அமைக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு என்பதற்காக இதனை பொறுப்பேற்கமுடியாது என்றால், நல்லாட்சி அரசாங்கத்தில் அமைக்கப்பட்ட   டயர் கம்பனி, மன்னாரில் அமைக்கப்பட்ட காற்றாலை மின் உற்பத்தி நிலையம் போன்ற அனைத்து வேலைத்திட்டங்களையும் அரசாங்கம் பொறுப்பேற்க கூடாது. 

அத்துடன் விசாரணையின்போது ஒருசில விடயங்கள் தொடர்பாக அவதானம் செலுத்த முடியாமல்போனதாக ஆணைக்குழு அறிவித்திருக்கின்றது. இரண்டு வருடங்களாக விசாரணை மேற்கொண்டு அறிக்கையை சமர்ப்பித்து, இவ்வாறு தெரிவிப்பது மிகவும் கவலைக்குரிய விடயமாகும். இந்த விசாரணை அறிக்கை மூலம் யாரையாவது பாதுகாக்கவேண்டிய தேவை அரசாங்கத்துக்கு இருந்திருக்கவேண்டும். அதனால்தான் இதன்பொறுப்பை ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்து அதிலிருந்து தப்பிக்கொள்ள அரசாங்கம் தற்போது முயற்சிக்கின்றது.

அதனால் ஆணைக்குழுவின் பொறுப்பில் இதனை சுமத்திவிட்டு, அரசாங்கத்துக்கு இதிலிருந்து தப்பிக்கொள்ள முடியாது. அதனால் பொலிஸ் குற்றவிசாரணை குழுவொன்றை அமைத்து உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும். வெளி தலையீடுகளை மேற்கொள்ளாமல் இந்த விசாரணையை மேற்கொள்ள இடமளித்தால் மக்கள் எதிர்பார்க்கும் பெறுபேற்றை பெற்றுக்கொள்ளலாம் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கின்றது என்றார்.