பொலிஸ் அதிகாரி ஒருவர், கீழே விழுந்து உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவமொன்று, இன்று ஹாலி-எல பகுதியின் நாராங்கலை என்ற இடத்தில்  இடம்பெற்றுள்ளது.

ஹாலி-எல பகுதியின் நாராங்கலை என்ற இடத்தைச் சேர்ந்த 55 வயது நிரம்பிய இரு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவர் ஹாலி-எலை பொலிஸ் நிலையத்தில், பொலிஸ் சார்ஜன்ட்டாக கடமையாற்றி வந்தவராவார்.

இவர் கடமையை நிறைவு செய்துவிட்டு, வீடு திரும்புகையில், கீழே விழுந்திருந்தார். இதனைக் கண்ட அப் பிரதேச வாசிகள், குறித்த பொலிஸ் நிலையத்திற்கு அறிவித்திருந்தனர்.

இதையடுத்து பொலிசார் விரைந்து கீழே விழுந்திருந்த பொலிஸ் சார்ஜன்ட்டை, பதுளை பொது வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதிலும், அவரை பரிசோதனை செய்த வைத்தியர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். 

கிருமிநாசினி அருந்தியே, இம் மரணம் சம்பவித்துள்ளதாகவும் வைத்தியர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பான நீதிமன்ற விசாரணைகளை மேற்கொண்ட பதுளை நீதிமன்ற நீதிபதி, சடலம் குறித்த சட்ட மருத்துவ பரிசோதனைகளை முன்னெடுத்து, அதன் அறிக்கையை சமர்ப்பிக்கும்படியும், அதற்கென சடலத்தை வைத்தியசாலையின் பிரேத அறைக்கு கொண்டு செல்லும்படியும், பொலிசாருக்கு உத்தரவிட்டார்.

ஹாலி-எல பொலிசார், மேற்படி மரணம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.