(லியோ நிரோஷ தர்ஷன்)

காணாமல் போனவர்கள் தொடர்பான சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்றியதன் மூலம் இலங்கை பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்க விடயத்தில் முக்கியமான மைல்கல்லை தாண்டியுள்ளதாக அமெரிக்க இராஜாங்க தினைக்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான துணை செயலாளர் நீஷா பிஷ்வால் தெரிவித்துள்ளார். 

கூட்டு எதிர் கட்சியின் கடும் எதிரப்புகளுக்கு மத்தியில் காணாமல்போனவர்கள் தொடர்பான அலுவலகம் (ஸ்தாபித்தலும் நிருவகித்தலும் பணிகளை முன்னெடுத்தலும் ) சட்டமூலம் நேற்று பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதனூடாக இலங்கையின் உள் நாட்டு போரின் போது காணாமல் போனவர்கள் தொடர்பான விபரங்களை சேகரித்தல் அதற்கான சட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்கும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கான தகவல் வழங்கவும் உள்வாங்குவதற்கான இடமாக அலுவலகம் செயற்படும். 

மேலும் காணாமல்போனவர்கள் தொடர்பாக தற்போதைய உண்மைகளை கண்டறிவதற்கான நடவடிக்கைகளும் இந்த அலுவலகத்தின் ஊடாகவே முன்னெடுக்கப்பட உள்ளது. இந்நிலையிலேயே அமெரிக்க இராஜாங்க தினைக்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான துனை செயலாளர் நீஷா பிஷ்வால் சட்டமூலத்தை வரவேற்றுள்ளார். 

காணாமல் போனவர்கள் தொடர்பான அலுவலகம் ஸ்தாபிக்கப்படுவதன் ஊடாக இலங்கையால் அர்த்தப்பூஷ்டியான  நல்லிணக்கத்தை அடைவதற்கு வழிவகுக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.