( இராஜதுரை ஹஷான்)

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான கூட்டணியை பலவீனப்படுத்தும் வகையில் சுதந்திர கட்சி உறுப்பினர்களின் கருத்துக்கள் காணப்படுகிறது.

கூட்டணிக்குள் காணப்படும் உள்ளக பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தை ஊடாக மாத்திரமே தீர்வை பெற்றுக் கொள்ள முடியும். கூட்டணியின் உறுப்பினர்கள் அனைவரும் கூட்டுப் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என போக்குவரத்து இராஜாங்க  அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.

தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தினர் முன்வைக்கும் அனைத்துக்  கோரிக்கைகளையும் செயற்படுத்த முடியாது - திலும் அமுனுகம | Virakesari.lk

கொழும்பில் இன்று இடம் பெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

ஸ்ரீ லங்கா சுதந்திர பொதுஜன பெரமுன கூட்டணியில் பொதுஜன பெரமுன பிரதான கட்சியாக உள்ளது.ஏனைய கட்சிகள் சகோதார கட்சிகளாக செயற்படுகின்றன.

கூட்டணியில் சுதந்திர கட்சி புறக்கணிக்கப்படுவதாக அக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் குறிப்பிடுகின்றனமை அடிப்பமை தன்மையற்றது.சுதந்திர கட்சியின் ஒரு தரப்பினரது கருத்துக்கள் கூட்டணியை பலவீனப்படுத்தும் வகையில் காணப்படுகிறது.

பல்வேறு கொள்கையினை கொண்ட கட்சிகள் ஒன்றினைந்து கூட்டணியமைத்துள்ள போது  கருத்து வேறுப்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு முரண்பாடுகள் தோற்றம் பெறுவது இயல்பானதொரு விடயமாகும்.

முரண்பாடுகளுக்கு பேச்சுவார்த்தை ஊடாக மாத்திரமே தீர்வை காண முடியும்.அதனை விடுத்து உள்ளக பிரச்சினைகளை பகிரங்கப்படுத்துவதால் எவ்வித பிரயோசனமும் எத்தரப்பினருக்கும் ஏற்படாது. மாறான முரண்பாடுகள் மாத்திரமே தீவிரமடையும்.

சுதந்திர கட்சியின் ஒரு தரப்பினர் அரசாங்கத்தில் இருந்து வெளியேற தீர்மானித்துள்ளதாகவும், இவ்விடயம் சுதந்திர கட்சியின் செயற்குழு கூட்டத்தில் பேசப்பட்டுள்ளதாகவும் அறிய முடிகிறது. சுதந்திர கட்சியின் ஒரு தரப்பினரது செயற்பாடு குறித்து  பொதுஜன பெரமுன தலைமையிலான கூட்டணியின் உயர்மட்ட தலைவர்களுடன் பேச்சுவார்த்தையினை முன்னெடுப்போம்.

ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தில் சேர்ந்து பயணிக்க வேண்டும் என்று கருதியே மக்கள் சுதந்திர கட்சிக்கு ஆதரவு வழங்கியுள்ளார்கள்.மக்களாணைக்கு மதிப்பளித்து சுதந்திர கட்சியினர் செயற்பட வேண்டும்.கூட்டணி ஊடாக அனைத்து தரப்பினரும் இணைந்து செயற்பட்டால் மாத்திரமே முரண்பாடற்ற அரச நிர்வாகத்தை முன்னெடுத்து செல்ல முடியும் என்றார்.