கொவிட் கட்டுப்பாட்டிற்கான உலக சுகாதார அமைப்பின் கோவாக்ஸ் திட்டத்தின் கீழ் 264,000 தடுப்பூசி டொஸ்கள் மார்ச் 7 ஆம் திகதி இலங்கையை வந்தடையும் என ஆரம்ப சுகாதார சேவைகள், தொற்று நோய்கள் மற்றும் கொவிட் நோய்க் கட்டுப்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்தார்.

கோவாக்ஸ் திட்டத்தின் கீழ் இலங்கைக்கு உலக சுகாதார ஸ்தாபனம் வழங்கும் முதல் தொகுதி தடுப்பூசிகள் இதுவாகும்.

சிலாபம் பொது வைத்தியசாலையின் இருதயவியல் பிரிவுக்கு 16 ஐ.சி.யூ படுக்கைகளை நன்கொடையாக வழங்குதல், மல்டி பனோமீட்டர் மானிட்டர்களை நன்கொடையாக வழங்குதல், கொவிட் 19 வைரஸுக்கு பதிலளிக்கும் வகையில் கட்டப்பட்ட மருத்துவ ஆய்வகத்தை திறத்தல் மற்றும் மகப்பேறியல் மற்றும் பெண்ணோயியல் கிளினிக் பிரிவு திறப்பு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே இராஜாங்க அமைச்சர் இதனைக் கூறினார்.

தடுப்பூசி செலுத்தப்படுவதில் உலகின் முதல் நாடுகளில் இலங்கை ஒன்று என்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும் இலங்கையில் தடுப்பூசி போடுவதைத் தொடங்குவதற்கான ஜனாதிபதியின் தலைமைத்துவ உறுதிப்பாட்டுக்கும் அவர் பாராட்டுக்களை தெரிவித்தார்.