(லியோ நிரோஷ தர்ஷன்)

சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான நிரந்தர வதிவிட பிரதிநிதி மாக்ரட் ஹிரித்திரயாவை அவசரமாக சந்தித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் கலந்துரையாடியுள்ளனர். 

ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் விஞ்ஞான , தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மற்றும் உள்ளுராட்சி மன்ற அமைச்சர் பைசர் முஸ்தபா ஆகியோரும் கலந்துக் கொண்டுள்ளனர். 

பொது மக்களினால் ஏற்றுக் கொள்ள கூடிய வகையிலான நிதி கொள்கையை முன்னெடுப்பது தொடர்பில் இந்த சந்திப்பில் கூடிய கவனம் செலுத்தப்பட்டுள்ளது. மேலும் நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னரான நிதி ஒழுக்கம் மற்றும் கொள்கைகள் தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான நிரந்தர வதிவிட பிரதிநிதி மாக்ரட் ஹிரித்திரயாவை தெளிவுப்படுத்தியுள்ளனர். 

நாட்டில் ஏற்பட்டுள்ள பெறுமதிசேர் வரி சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தணைகளுக்கு அமைவாக முன்னெடுக்கப்பட்டுள்ளதாக எதிர் அரசியல் தரப்புகளில் குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்படுகின்ற நிலையில், ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான நிரந்தர வதிவிட பிரதிநிதி மாக்ரட் ஹிரித்திரயாவை சந்தித்துள்ளனர். 

தேசிய வருமானம் இலக்குகள் மற்றும் சர்வதேச முதலீடுகளை மேலும் வலுவுடன் உள்வாங்க கூடிய நிதி சந்தையை ஸ்தாபித்தல் மற்றும் நம்பக தன்மையை வெளிப்படுத்தல் போன்ற சவால்களுக்கு மத்தியில் நல்லாட்சி அரசாங்கம் பொருளாதார திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது. 

எவ்வாறாயினும் மக்கள் சார்ந்த நிதி கொள்கையினை எதிர்வரும் காலங்களில் பின்பற்ற உள்ளமை தொடர்பாக அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான நிரந்தர வதிவிட பிரதிநிதியிடம் விளக்கமளித்துள்ளது.

இந்த சந்திப்பு மிகவும் முக்கியமானது ஒன்றென சர்வதேச நாணய நிதியத்தின் கொழும்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.