(செ.தேன்மொழி)
ஹங்குலான மற்றும் உடப்புவ ஆகிய பகுதிகளில் சட்டவிரோதமான முறையில் துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை வைத்திருந்ததாக, இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது ,

ஹங்குலான பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது சட்டவிரோத துப்பாக்கியுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இராணுவத்திலிருந்து தப்பிச்சென்ற சிப்பாயான 32 வயதுடைய சந்தேக நபரிடமிருந்து இத்தாலியில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி, மோட்டார் சைக்கிள் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.

இதன்போது, உடப்புவ பொலிஸ் பிரிவில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது, துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் இன்னுமொரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 

இவரிடமிருந்து வெளிநாட்டு ரிவோல்டர் துப்பாக்கி ஒன்றும், அதன் 13 தோட்டாக்களும், 8 குழல் 12 ரக துப்பாக்கி தோட்டாக்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. மேற்படி சந்தேக நபர்கள் தொடர்களுக்கு எதிரான சட்டநடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.