கொழும்பு, டாம் வீதி பகுதியில் பயணப் பையொன்றினுள் அடைக்கப்பட்ட நிலையில் யுவதியின் சடலம் மீட்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரை பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.

அடையாளம் காணப்பட்ட பிரதான சந்தேக நபர் புத்தல காவல் நிலையத்துடன் இணைக்கப்பட்ட ஒரு பொலிஸ் அதிகாரி என பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பிரதிப் பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

மேற்கண்ட பொலிஸ் அதிகாரிக்கும் சடலமாக மீட்கப்பட்ட யுவதிக்கும் காதல் தொடர்பு இருந்ததாகவும், பெப்ரவரி 28 ஹங்வெல்ல பகுதி ஹோட்டலுக்கு இந்த யுவதியை அழைத்த இவர் அங்கு யுவதியை படுகொலை செய்துள்ளார் என்றும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

யுவதியின் தலையை வீசிவிட்டு உடலை மட்டும் கொழும்புக்கு எடுத்துவந்த இந்த நபர் , தஙகியிருந்த ஹோட்டலின் உரிமையாளரை தொலைபேசியில் தொடர்புகொண்டு இந்த விடயத்தை வெளியில் கூறினால் கொலை செய்வதாக எச்சரித்துள்ளார்.

எவ்வாறாயினும் தலைமறைவான இவரை கைதுசெய்த விசேட பொலிஸ் குழுக்கள் விரைந்துள்ளன.

தாம் பெரிய தவறொன்றை செய்துவிட்டதாகவும் பொலிஸ் தன்னை நெருங்கினால் தற்கொலை செய்துகொள்வதாகவும் கூறி இவர் எழுதிய கடிதமொன்றும் அவரது வீட்டில் இருந்து சிக்கியுள்ளது.

கொழும்பு - டாம் வீதி பொலிஸ் நிலைய அதிகாரப் பிரிவுக்கு உட்பட்ட  ஐந்து லாம்பு சந்திக்கு அருகே டாம் வீதியில் பயணப் பையொன்றினுள் இருந்து குறித்த யுவதியின் சடலம் மார்ச் முதலாம் திகதி மீட்க்கப்பட்டது.  

டாம் வீதி பொலிஸ் நிலையத்துக்கு  கிடைக்கப் பெற்ற தகவல் ஒன்றுக்கு அமைய, மார்ச் 1 பிற்பகல் 2.30 மணியளவில் இந்த சடலம் பொலிஸாரால் மீட்க்கப்பட்டது.

இவ்வாறு சடலமாக மீட்க்கப்பட்ட யுவதி குருவிட்ட பகுதியைச் சேர்ந்த 30 வயதுடையவர் ஆவார்.