(எம்.மனோசித்ரா)

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்களுடன் தொடர்புடைய முக்கிய சூத்திரதாரிகள் யார் என்பதை எதிர்வரும் ஏப்ரல் 21 ஆம் திகதிக்கு முன்னர் வெளிப்படுத்த வேண்டும்.

அவ்வாறில்லையெனில் நாம் கறுப்பு ஆடையணிந்தும், கறுப்பு கொடிகளை ஏற்றியும் நாடளாவிய ரீதியில் எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவோம் என்று பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார்.

அப்பாவி பொது மக்கள் கொல்லப்படுவதற்கு காரணமானவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்பதே எமது கோரிக்கையாகும். மாறாக பௌத்த அமைப்புக்களை தடை செய்வதை நாம் எதிர்பார்க்கவில்லை என்றும் பேராயர் சுட்டிக்காட்டினார்.

கொழும்பு பொரளையிலுள்ள பேராயர் இல்லத்தில் செவ்வாய்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் ,

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை கிடைத்துள்ளது.

அதனை ஆராய்ந்து உத்தியோகபூர்வ நிலைப்பாட்டை தெரிவிப்பதற்காக எனது தலைமையில் ஆயர்கள், அருட்தந்தைகள் மற்றும் ஏனைய உறுப்பினர்கள் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை ஒருபுமிருக்க குற்ற விசாரணைப் பிரிவு , புலனாய்வு பிரிவினரால் முன்னெடுக்கப்படுகின்ற விசாரணைகள் திருப்தியளிக்கக் கூடியவையாக இல்லை.

தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு 2 வருடங்கள் நிறைவடையவுள்ள போதிலும நியாயம் கிடைக்காமை கவலையளிக்கிறது.

எமக்கான நியாயத்தை வலியுறுத்தி எதிர்வரும் 7 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை 'கறுப்பு ஞாயிறாக' அறிவிக்கப்பட்டு நாடளாவிய ரீதியிலுள்ள கத்தோலிக்க தேவாலயங்களில் அமைதிவழி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளோம். இந்த ஆர்ப்பாட்டம் எமக்கான நியாயம் கிடைக்கும் வரை தொடரும்.

உயிர்த்த ஞாயிறு ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையில் பொது பலசேனா அமைப்பை தடை செய்வதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அப்பாவி பொது மக்கள் கொல்லப்படுவதற்கு காரணமான முக்கிய சூத்திரதாரிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்பது எமது கோரிக்கையே தவிர , பௌத்த அமைப்புக்களை தடை செய்வதல்ல.

இவ்வாறான செயற்பாடுகளின் மூலம் சமூகத்தில் இல்லாதவொரு பிரச்சினையை உருவாக்க வேண்டாம் என்று அனைவரிடமும் கேட்டுக்கொள்கின்றோம்.

அன்று ஆட்சி அதிகாரத்திலிருந்த சிலர் தகவல்கள் கிடைத்தும் கவனயீனமாக செயற்பட்டமை குற்றமாகும்.

அவ்வாறானவர்கள் தற்போது தம்மை உத்தமர்கள் எனக் காண்பித்து தப்பித்துக் கொள்ள முயற்சிக்கின்றனர். தமது இனத்தை , மதத்தை, கட்சியை சார்ந்தவர் எனக் கூறிக் கொண்டு ஒரு சிலரால் தவறு செய்பவர்கள் பாதுகாக்கப்படுவதால் , அவர்கள் தைரியமாக நடமாடும் சூழல் ஏற்பட்டுள்ளது. எவ்வாறிருப்பினும் அரசியல் காரணங்களைக் கூறி இதிலிருந்து தப்பிக்க முடியாது.

அடிப்படைவாத தாக்குதல்களால் நூற்றுக்கணக்கான உயர்கள் கொல்லப்பட்டுள்ளமை விளையாட்டல்ல. எனவே தற்போதேனும் முறையான நடவடிக்கை எடுக்காவிட்டால் எதிர்காலத்தில் மீண்டும் இது போன்றதொரு தாக்குதல் இடம்பெறக் கூடும்.

ஜனாதிபதி , பிரதமர் உள்ளிட்ட பலரும் எமக்கு பல வாக்குறுதிகளை வழங்கினர். ஆனால் அவற்றில் எவையும் நிறைவேற்றப்படவில்லை. எவ்வாறிருப்பினும் ஏப்ரல் 21 ஆம் திகதிக்கு முன்னர் எமக்கான நியாயம் வழங்கப்பட வேண்டும்.

அவ்வாறில்லை என்றால் எம்மால் தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுவதோடு , ஏற்கனவே கூறியதைப் போன்று சர்வதேச கத்தோலிக்க அமைப்புக்களை நாடுவோம்.

இதற்காக புதிய அமைச்சொன்றை நிறுவியேனும் எமக்கான நியாயத்தை வழங்குங்கள். ஏனெனில் இது தேசிய பாதுகாப்புடன் தொடர்புடைய விடயமாகும். கடந்த ஆட்சியாளர்கள் மாத்திரமின்றி தற்போது ஆட்சியிலிருப்பவர்களும் தாக்குதல்களில் பாதிக்கப்பட்டோருக்கு பொறுப்பு கூற வேண்டும் என்றார்.