(இராஜதுரை ஹஷான்)

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தில் கூட்டணியமைத்திருந்தாலும் அவர்களின் செயற்பாடு குறித்து எந்நிலையிலும் அவதானத்துடன் உள்ளோம்.

2018 ஒக்டோபர் அரசியல் நெருக்கடி தற்போதைய அரசாங்கத்தில் ஒருபோதும் தோற்றம் பெறாது என  சமுர்த்தி, நுண்கடன் மற்றும் தொழிலபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.

480 மில்லியன் டொலருக்காக அமெரிக்காவிடம் அடகு வைக்க முடியாது - செஹான்  சேமசிங்க | Virakesari.lk

அநுராதபுரம்  பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர்மேலும் குறிப்பிடுகையில்,

பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தில்  ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி ஒரு பங்காளி கட்சியாக காணப்படுகிறது. கூட்டணியமைத்திருந்தாலும் சுதந்திர கட்சியினரது செயற்பாடுகள் குறித்து எந்நிலையிலும் அவதானிப்புடன் இருப்போம். சுதந்திர கட்சியின் செயற்குழு கூட்டம் அண்மையில் இடம் பெற்றது.

அரசாங்கத்தில் இருந்து வெளியெறுமாறு சுதந்திர கட்சியின் செயற்கு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.

இவ்விடயம் குறித்து பொதுஜன பெரமுன உரிய அவதானம் செலுத்தியுள்ளது. ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதலின் அறிக்கை சுதந்திர கட்சியின் தலைமைத்துவத்திற்கு சாதகமாக  கிடைக்கப் பெற்றிருந்தால் வெறுக்கத்தக்க கருத்துக்களை  சுதந்திர கட்சியினர் குறிப்பிட மாட்டார்கள்.

மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை பாதுகாத்துக்கொள்ள  தவறுகளை மூடி மறைக்க வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு கிடையாது.

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கைகள் சுயாதீனமான முறையில் இடம்பெற்றுள்ளது.

அறிக்கையில் ஒரு சில குறைப்பாடுகள் காணப்படுகிறது. இதனைகொண்டு முழு அறிக்கையினையும் விமர்சிக்க முடியாது.

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியினர் அரசாங்கத்தில் இருந்து வெளியேறுவதா அல்லது அரசாங்கத்துடன் இணக்கமாக செயற்படுவதா என்ற தீர்மானத்தை சுதந்திர கட்சியினர் தீர்மானிக்க வேண்டும்.

முரண்பாடுகளுக்கு தீர்வு கண்டு கூட்டணியாக இணைந்து செயற்படவே எதிர்பார்க்கிறோம். 2018 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஒக்டோபர் அரசியல் நெருக்கடி ஒருபோதும் தோற்றம் பெறாது என்றார்.