(எம்.ஆர்.எம்.வசீம்)
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி மரணிக்கும் முஸ்லிம்களின் சடலங்களை அடக்கம் செய்வதற்காக கிளிநொச்சி இரணை தீவை தெரிவு செய்திருப்பதன் மூலம் இனவாதம் தூண்டப்படலாம் என சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

கொவிட் வைரஸ் தொற்றுக்குள்ளாகி மரணிப்பவர்களின் சடலங்களை அடக்கம் செய்வதற்காக கிளிநொச்சி இரணை தீவை தெரிவு செய்திருப்பதாக அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பின்போது அமைச்சர் கெஹலிய ரம்புக்வல தெரிவித்திருந்த கருத்துக்கு பதிலளிக்கும் வகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
கொவிட் தொற்றில் மரணிப்பவர்களை அடக்கம் செய்வதற்காக அரசாங்கம் கிளிநொச்சி இரணை தீவை தெரிவுசெய்திருப்பதாக அமைச்சர் கெஹலிய ரம்புக்வல தெரிவித்திருக்கின்றார்.
அரசாங்கத்தின் இந்த தீர்மானத்தின் மூலம் கொரோனா தொற்றில் மரணிப்பவர்களை அடக்கம் செய்வது தொடர்பாக, அரசாங்கம் இதற்கு முன்னர் மேற்கொண்டுவந்த நிலைப்பாடு சரியானது என்பதை உணர்த்த எடுத்திருக்கும் முயற்சியாகவே இதனை காண்கின்றோம்.
அத்துடன் கிள்நொச்சி இரணை தீவை தெரிவு செய்திருப்பதன் மூலம் சிறுபான்மை மக்களுக்கிடையில் இனவாதத்தை தூண்டும் ஒரு நடவடிக்கையாகவே இது பலராலும் பார்க்கப்படுகின்றது என்றார்.
இதேவேளை, ஒரு கல்லினால் இரண்டு பறவைகளை வேட்டையாடும் நோக்கிலே அரசாங்கம் இரணை தீவை தெரிவு செய்திருக்கின்றது.
அதனால் தமிழ் மக்கள் இதுதொடர்பாக மிகவும் புரிந்துணர்வுடன் செயற்படவேண்டும் என அரசாங்கத்தின் இந்த தீர்மானம் தொடர்பில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோகணேசன் தெரிவித்துள்ளார்.