(ஆர்.யசி)

தேசிய வளங்களை பாதுகாப்போம் என ஆட்சிக்கு வந்தவர்கள் இன்று இந்தியாவிற்கும், சீனாவிற்கும் அடிபணிந்து விட்டனர். இலங்கையின் தேசிய வளங்களை விற்கும் கொள்கையில் ராஜபக்ஷ அரசாங்கம் உள்ளதென்பது தெளிவாக வெளிப்பட்டுவிட்டது.

துறைமுக உடன்படிக்கையிலும், தேசிய வளங்களை விற்கும் நடவடிக்கைகும் இந்த அரசாங்கம் பொறுப்புக்கூறியாக வேண்டும் என ஓமல்பே சோபித தேரர் தெரிவித்தார்.

பௌத்தர்களுக்கு தமிழர்கள் மீது எவ்வித முரண்பாடுகளும் கிடையாது - யாழில் சோபித  தேரர் | Virakesari.lk

அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பெளத்த அமைப்புகள், தொழிற்சங்கங்கள் மற்றும் சமூக ஆர்வலர் அமைப்புகளை ஒன்றிணைந்து செயற்பட்டு வரும் ஓமல்பே சோபித தேரர் அண்மைக்காலமாக அரசாங்கத்தின் கொள்கைக்கு எதிரான கருத்துக்களை முன்வைத்து வருகின்றார். 

கிழக்கு முனையத்தை மீட்டெடுக்கும் அமைப்பு என்ற பெயரில் இவர்கள் அமைப்பொன்றை உருவாக்கியுள்ள நிலையில் கொழும்பு மேற்கு முனையம் தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானங்களையும் தற்போது கண்டித்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்தியாவின் மேற்கு முனையத்தை இந்தியாவிற்கு வழங்குவதற்கு அமைச்சரவையில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம் தொடர்பில் தேரர் கூறுகையில்,

தேசிய வளங்களை விற்பதற்கு எதிராகவும், சர்வதேச தலையீடுகள் ஏற்படுவதை தடுக்கவும் தாம் ஆட்சிக்கு வந்துள்ளதாக கூறி மக்களிடம் வாக்குறுதிகளை கொடுத்து ராஜபக் ஷவினரின் அரசாங்கம் ஆட்சிக்கு வந்தனர்.

ஆனால் ஆட்சி அமைத்த பின்னர் இவர்கள் கொடுத்த வாக்குறுதிகளில் இருந்து விலகி நிற்கின்றனர் என்பது வெளிப்பட்டுள்ளது.

கொழும்பு துறைமுக கிழக்கு முனையத்தை இந்தியாவிற்கு கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்த வேளையில் நாம் தலையிட்டு முழுமையாக எமது வளத்தை மீட்டெடுத்தோம்.

மீட்டெடுத்து பெருமூச்சு விட முன்னர் மேற்கு முனையத்தை அதே உடன்படிக்கைக்கு அமைய வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இது மிகப்பெரிய துரோகச் செயல் என்றே நாம்  கருதுகிறோம். அரசாங்கம் இந்தியாவிற்கும், சீனாவிற்கும் அடிபணிந்து செயற்பட்டு வருகின்றது.

தேசிய வளங்களை விற்க மாட்டோம் என வாக்குறுதி கொடுத்து ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷவும், பிரதமர் மஹிந்த ராஜபக் ஷவும் கொடுத்த வாக்குறுதிகளை பொய்யாக்கி விட்டனர்.

அதற்கான வெளிப்பாடே தற்போது அமைச்சரவை தீர்மானங்கள் மூலமாக வெளிப்பட்டு வருகின்றது. எனவே அரசாங்கம் மேற்கொள்ளும் இந்த நாசகார செயற்பாடுகளுக்கு நிச்சயமாக ராஜபக் ஷ அரசாங்கம் மக்களிடம் பதில் கூறியாக வேண்டும்.

அரசாங்கம் இப்போது விடும் தவறுகளுக்காக நிச்சயமாக மக்கள் கஷ்டப்பட வேண்டி வரும் என்பதை நாம் மீண்டும் அரசாங்கத்திற்கு வலியுறுத்துகின்றோம் என்றார்.