மன்னார் மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் கொரோனா தொற்றின் முதல் நிலை தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்ட  2 மாணவர்கள் பாடசாலையில் தனிப்பட்ட ஒரு பரீட்சை மண்டபத்தில் பரீட்சைக்கு தோற்றி வருவதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், மன்னார் மாவட்டத்தில் கடந்த இரண்டு தினங்களில் மேலும் 09 கொரோனா தொற்றாளர்கள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவர்களில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (28) 5 கொரோனா தொற்றாளர்கள் மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவர்களில் 3 கொரோனா தொற்றாளர்கள் ஏற்கனவே தொற்றுடன் அடையாளம் காணப்பட்ட சிகை அலங்கரிப்பு நிலையத்தின் குடும்பத்தினருடன் தொடர்புபட்டவர்களாகவும், மேலும் ஒருவர் இன்னும் ஓர் சிகை அலங்கரிப்பு நிலையம் ஒன்றின் பணியாளராகவும், 5 ஆவது நபர்   பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் மன்னார் மாவட்ட அலுவலகத்தில் கடமையாற்றும் ஒருவராக உள்ளார்.

மேலும் நேற்றைய தினம் திங்கட்கிழமை (01.03.2021) 4 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.மாந்தை மேற்கு பகுதியில் ஏற்கனவே தொற்றாளர்களுடன் தொடர்பு பட்டவர்கள் இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மன்னார் மாவட்டத்தில் மொத்தமான 271 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த வருடத்தில் மாத்திரம் 254 தொற்றாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.