(செ.தேன்மொழி)
போதைப் பொருள் கடத்தல் தொடர்பில் நாடளாவிய ரீதியில் 140 சுற்றிவளைப்புகள் இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது ,

போதைப் பொருள் கடத்தல் செயற்பாடுகள் தொடர்பில் நேற்று மாத்திரம் நாடளாவிய ரீதியில் 140 சுற்றிவளைப்புகள் இடம்பெற்றுள்ளன. இதன்போது  கல்கிஸ்ஸ பகுதியில் குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஹெரோயின் போதைப் பொருளுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு -15 பகுதியைச் சேரந்த 34 வயதுடைய நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இவரிடமிருந்து 5 கிராம் 150 மில்லி கிராம் ஹெரோயின் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. இந்நிலையில், மாளிகாவத்தை பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஹெரோயின் மற்றும் கஞ்சா போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளது.

மேற்படி பகுதியைச் சேர்ந்த சந்தேக நபரிடமிருந்து இரண்டு கிராம் 960 மில்லி கிராம் ஹெரோயின் போதைப் பொருள் , 100 கிராம் 460 மில்லி கிராம் கஞ்சா போதைப் பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

பொத்துவில் - லாவுகல பகுதியில் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது கஞ்சா தோட்டமொன்று அடையாளம் காணப்பட்டுள்ளது. சுமார் ஒன்றரை ஏக்கர் நிலப்பரப்பை கொண்ட இந்த நிலப்பகுதியில் இரண்டு இலட்சத்து 40 ஆயிரம் கஞ்சா செடிகள் வளர்க்கப்பட்டுள்ளதுடன் , அவை அனைத்தும் தற்போது அழிக்கப்பட்டுள்ளன.

இதன்போது 4 கிலோ 800 கிராம் உலர்ந்த கஞ்சா போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளது. இதுத் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்கள் மூவரும் பொத்துவில் நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு எதிர்வரும் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை , தெமட்டகொட பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது 104 கிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.