(எம்.மனோசித்ரா)
கொவிட்-19 வைரஸ்  தொற்று காரணமாக உயிரிழப்பவர்களின் சடலங்களை  அடக்கம் செய்யக்கூடிய மேலும் 6 இடங்கள் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. ஆரம்பத்தில் இரணைத்தீவில் அடக்கம் செய்வதை ஆரம்பித்தாலும், புத்தளம், ஓட்டமாவடி மற்றும் மன்னார் உள்ளிட்ட 6 பகுதிகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இரணைத்தீவில் அடக்கம் செய்வது தொடர்பில் ஏதேனும் சிக்கல் நிலை ஏற்பட்டால் ஏனைய இடங்களில் அடக்கம் செய்வது தொடர்பில் தற்போது ஆய்வுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. முஸ்லிம்கள் வாழும் பிரதேசங்களில் நீர் நிலைகளில் பிரச்சினைகள் ஏற்படாத பகுதிகளை தெரிவு செய்யுமாறு முஸ்லிம் சமூகத்தினால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை கொவிட் தொற்றால் உயிரிழப்பவர்களின் சடலங்களை இரணைதீவில் அடக்கம் செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் சடலங்களை அங்கு கொண்டு செல்லல் மற்றும் சுகாதார பாதுகாப்புடன் அடக்கம் செய்தல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் சுகாதார தரப்பினரால் தெளிவுபடுத்தப்படும் என்று அமைச்சரவை பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் நேற்றைய ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,

கொவிட் தொற்றால் உயிரிழப்பவர்களின் சடலம் தொடர்பில் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய இரணைதீவில் சடலங்களை அடக்கம் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் சுகாதார தரப்பினரால் தெளிவுபடுத்தப்படும். குறித்த வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைவான வழிகாட்டல்கள் அது தொடர்பில் நியமிக்கப்பட்டுள்ள நிபுணர்கள் குழுவினால் தயாரிக்கப்பட்டு வெளியிடப்படும் என்றார்.

இதன் போது , 'இந்த பகுதியில் சுமார் 200 மக்கள் வாழ்கின்றனர். கொழும்பில் உள்ளதைப் போன்று குழாய் நீர் வசதி அந்த பகுதிகளில் இல்லை. அங்குள்ள மக்கள் நிலத்தடி நீரையே பயன்படுத்துகின்றனர். இவ்வாறான விடயங்கள் கொவிட் தொற்றால் மரணிப்பவர்களின் சடலங்களை அந்த பகுதிகளில் அடக்கம் செய்வதில் தாக்கம் செலுத்துமல்லவா ? ' என்று கேள்வியெழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்த அமைச்சர் கெஹெலிய , 'இவ்விடயம் தொடர்பில் கொவிட் சடலங்களை நல்லடக்கம் செய்வது தொடர்பான விடயத்தை ஆராயும் நிபுணர்கள் குழுவிற்கு கொண்டு செல்வதாகவும், அக்குழுவே இதுதொடர்பாக விரிவான முறையில் ஆராய்ந்து தீர்மானங்களை எடுக்கும்.' என்றும் தெரிவித்தார்.