-கார்வண்ணன்

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பாக சர்வதேச நாடுகள் வெளிப்படுத்தியுள்ள கருத்துக்கள், பலருக்கு ஆச்சரியத்தையும், சிலருக்கு அதிர்ச்சியையும் கொடுத்திருக்கிறது.

ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் மிச்செல் பச்லெட்டின் அறிக்கை கடந்த 24ஆம் திகதி ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 46ஆவது கூட்டத்தொடரில் முன்வைக்கப்பட்டிருந்தது.

இந்த அறிக்கை, மீது 24 ஆம் திகதியும், 25ஆம் திகதியும் ஊடாடல் கலந்துரையாடல் (Interactive Dialogue) இடம்பெற்றிருந்தது.

இந்தக் கலந்துரையாடலின் பிரதான அம்சம், ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் அறிக்கை தான். அதில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள், பரிந்துரைகளே முக்கியத்துவம் வாய்ந்தவை.

இந்த அறிக்கை பக்கச்சார்பானது நாட்டின் இறைமையை மீறுவதாக உள்ளது என்று கூறி, இலங்கை அரசாங்கம், அதனை நிராகரிக்க வேண்டும் என்று உறுப்பு நாடுகளிடம் கோரியிருந்தது.

இலங்கை அரசாங்கத்தின் இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு, உயர்ஸ்தானிகரின் அறிக்கையை சில நாடுகள் கண்ணை மூடிக்கொண்டு நிராகரித்தன.

வேறு சில நாடுகள், அறிக்கையின் உள்ளடக்கத்தை சுட்டிக்காட்டி விமர்சித்தன. மற்றும் சில நாடுகள் அங்கும் இல்லாமல் இங்கும் இல்லாமல், நோகாமல் நடந்துக்கொண்டன.

இன்னும் சில நாடுகள் அறிக்கைக்கு ஆதரவாகவும் இலங்கைக்கு எதிராகவும் கருத்துக்களை முன்வைத்திருந்தன.

இந்த ஊடாடல் கலந்துரையாடலில் 21 நாடுகள் வரை இலங்கைக்கு ஆதரவாகப் பேசியதாகவும், 15 நாடுகளே இலங்கைக்கு எதிராகக் கருத்துக்களை வெளியிட்டதாகவும் சில தகவல்கள் வெளியாகியிருந்தன.

இலங்கைக்கு ஆதரவாக கருத்து வெளியிட்ட 20 வரையான நாடுகளில், ரஷ்யா, சீனா, பாகிஸ்தான், வியட்நாம், மாலைதீவு, கியூபா, நிக்கரகுவா, எரித்ரியா, நேபாளம், அசர்பைஜான், காபோன், பிலிப்பைன்ஸ், எகிப்து ஆகிய 13 நாடுகள் மட்டும் தான், பேரவையின் உறுப்பு நாடுகளாகும்.

இவையே வாக்களிக்கும் உரிமை கொண்டவை. 

இலங்கைக்கு ஆதரவாகப் பேசிய ஈரான், கம்போடியா, லாவோஸ், வடகொரியா, பெலாரஸ், சிரியா போன்ற நாடுகள் பேரவையின் உறுப்பு நாடுகளோ, வாக்களிக்கும் உரிமை கொண்டவையோ அல்ல.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் 47 உறுப்பு நாடுகள் உள்ள நிலையில், இலங்கை 18 நாடுகளின் ஆதரவைப் பெற்றுக்கொண்டுள்ளதாக அரசாங்க வட்டாரங்கள் கூறியிருந்தன.

எனினும், எஞ்சிய ஐந்து நாடுகள் எவை என்பது பேரவையின் ஊடாடல் கலந்துரையாடலில் வெளிப்படவில்லை.

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க  https://epaper.virakesari.lk/newspaper/Weekly/weekly-main/2021-02-28#page-18

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க https://bookshelf.encl.lk/