சதீஷ் கிருஷ்ணபிள்ளை

ஒரு ராஜா கதை. அவர் செல்வம் கொழிக்கும் சிற்றரசை ஆள்பவர். பேரரசிலும் செல்வாக்கு மிக்கவர். அந்தப்புரத்தில் ஆசை நாயகிகள் ஏராளம். சுகபோக வாழ்க்கை.

ராஜாவிற்கு ஒரு மகள். தம்மை ராஜா சிறை வைத்திருப்பதாகக் கூறுகிறார். வெளியுலகுடன் தொடர்பு இல்லை. சூரிய வெளிச்சத்தைக் கண்டு நாளாகிறது. இனிமேலும் உலகைக் காணும் பாக்கியம் கிடைக்குமா? இல்லாவிட்டால், இப்படியே காணாமல் போய் விடுவேனா? என்று ஆதங்கப்படுகிறார்.

இளவரசியின் கதையை ஊர் அறிகிறது. உலகத்திற்கும் அறியக் கிடைக்கிறது. உலகம் ராஜாவைக் கேட்கிறது. அவள் நன்றாகத்தான் இருக்கிறாள். அவளை நாம் பார்த்துக் கொள்வோம். நீங்கள் கவலைப்பட வேண்டாம் என்று ராஜாவின் அரண்மனை பதில் அளிக்கிறது.

ராஜா யாருமல்லர். டுபாயின் ஆட்சியாளர். ஷேய்க் மொஹம்மட் ரஷீத் பின் அல்-மக்தூம். அவரது மகள் லத்தீபா. 38 வயதுடைய பெண். கழிவறையில் அமர்ந்து கொண்டு, தமது நிலையை விபரித்து இவர் பதிவு செய்ததாகக் கூறப்படும் வீடியோ, இன்று உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது.

தமது நண்பிகள் இரகசியமாக அனுப்பி வைத்த தொலைபேசியில், லத்தீபா தமது நிலையை விபரித்து வீடியோவாக பதிவு செய்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. 

இந்த வீடியோ ஊடக நிறுவனங்களுக்கு கசிந்துள்ளன. வீடியோ எங்கே, எப்போது பதிவு செய்யப்பட்டது என்ற தகவல்கள் இல்லை.

இந்த வீடியோவை பி.பி.சி. உள்ளிட்ட செய்தி நிறுவனங்கள் கடந்த வாரம் வெளியிட்டன. இது வெளியானபோது, லத்தீபா உயிரோடு இருக்கிறாரா என்பதை உறுதிப்படுத்தவும் முடியாத சூழ்நிலை. 

இது பற்றிய கேள்விகளுக்கு அரச குடும்பம் அறிக்கையால் பதில் அளித்தது. இளவரசி வீட்டில் பராமரிக்கப்படுகிறார் என்று அதில் எழுதியிருந்தது. ஷேய்க் மொஹம்மட்டுக்கு ஆறு மனைவிகள். இரண்டாவது மனைவிக்கு மூன்று பெண் பிள்ளைகள் உள்ளனர். 

அவர்களில் லத்தீபாவையும், ஷம்சாவையும் பற்றி உலகம் அறிந்திருக்கிறது. லத்தீபா இரண்டு தடவைகள் குடும்பத்தில் இருந்து தப்பிக்க முனைந்தார். ஷம்சா ஒரு தடவை.

2000ஆம் ஆண்டு ஜூலை மாதம் இங்கிலாந்தின் சரே நகரிலுள்ள குடும்பத் தோட்டத்தில் இருந்து ஷம்சா தப்பியோடினார். தந்தை பொலிஸாருக்கு அறிவிக்கவில்லை. தமது உளவாளிகளை வைத்துத் தேடியதில், பல நாட்களுக்குப் பின்னர் கேம்பிரிட்ஜ் நகரில் ஷம்சா சிக்கினார்.

அதற்குப் பின்னர் ஷம்சாவின் சுவடுகளே இல்லை. 2002ஆம் ஆண்டு ஜூன் மாதம் எமிரேட்ஸில் இருந்து ஓமானுக்கு தப்பிக்க முனைந்த சமயம் லத்தீபாவிற்கு 16 வயது தான் இருக்கும். அங்கு அவர் பிடிக்கப்பட்டு, மூன்று வருடங்களுக்கு மேலாக சிறைவைக்கப்பட்டார். தாம் தனிமைச் சிறையில் அடைத்து வைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டதாக லத்தீபா குற்றம் சுமத்துகிறார்.

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2021-02-28#page-12

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க https://bookshelf.encl.lk/