- சிவலிங்கம் சிவகுமாரன் -

19 ஆவது திருத்தச்சட்டத்தில் தப்பிப்பணழைத்த  நான்கு விடயங்களில் தகவல் அறியும் சட்டமூலமும் விளங்குகின்றது. இவ்வாறு தப்பிப் பிழைத்த சட்டமூலம் எந்தளவு மக்களுக்கு பயன்படுகின்றது என்ற மதிப்பீட்டை பிரதேசவாரியாக ஆணைக்குழு மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது.

2021 பெப்ரவரி 3 ஆம் திகதியுடன் எமது நாட்டில் தகவலுக்கான உரிமை சட்டம் அமுல்படுத்தப்பட்டு நான்கு வருடங்கள் பூர்த்தியாகி விட்டிருக்கின்றன. இந்நிலையில் பொது மக்கள், ஊடகவியலாளர்கள், அரச சேவையாளர்களால் இச்சட்டத்தைப் பயன்படுத்தி கோரப்பட்டிருந்த தகவல்கள் முறைப்படி வழங்கப்பட்டனவா, அதன் மூலம் தகவல் அறியும் உரிமை பாதுகாக்கப்பட்டிருக்கின்றதா, தகவல்களை வழங்க மறுத்த சந்தர்ப்பங்களில் அது தொடர்பில் ஆணைக்குழுவுக்கு மேன் முறையீடு செய்யப்பட்டு அதற்கான சாதகமான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளனவா? போன்ற கேள்விகள் எழுகின்றன.

எனினும் இந்த நான்கு வருட பயணத்தில் இலங்கை முன்னோக்கிச் செல்வதாகவே தகவலறியும்  உரிமைக்கான ஆணைக்குழு தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. இது தொடர்பாக நாடளாவிய ரீதியில் பகிரங்க அதிகார சபைகள், மற்றும் பிரஜைகளுடன் இணைந்ததான கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றன. இது பற்றி தமிழ் ஊடகங்கள் எந்தளவுக்கு தெளிவை கொண்டிருக்கின்றன என்பது தெரியாமலுள்ளது. ஏனெனில் இது தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு அறிவுறுத்தப்படுவதில்லை என்ற முறைப்பாடுகளும் எழுந்துள்ளன. 

உதாரணமாக இம்மாதம் 21 ஆம் திகதி நுவரெலியாவில் இடம்பெற்ற மாகாண ரீதியான கலந்துரையாடல் குறித்து எவருக்கும் அறிவிக்கப்பட்டிருக்கவில்லை. தகவல் அறியும் சட்டமூலத்தைப் பயன்படுத்தி பல முக்கியமான தகவல்களைப்பெற்று அதை மக்கள் மத்தியில் கொண்டு செல்லக் கூடிய ஊடகவியலாளர்களுக்கே அது குறித்து அறிவிக்கப்படுவதில்லை என்றால், பொது மக்களின் மத்தியில் இதை எவ்வாறு வெற்றிகரமாக முன்னெடுத்துச்செல்வது என்ற கேள்விக்கு ஆணைக்குழு என்ன பதில் கூறப்போகின்றது என்பது தெரியவில்லை.

19 ஆவது திருத்தச் சட்டத்தில் தப்பிப் பிழைத்த சட்டம்
அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தச்சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு 20 ஆவது திருத்த மூலம் வரப்போகின்றது என்ற உடன் முதலில் சமூக செயற்பாட்டாளர்களுக்கு தகவல் அறியும் சட்டமூலம் குறித்த அச்சமே தலை தூக்கியிருந்தது. ஏனெனில் 19 ஆவது திருத்தச்சட்டத்தின் ஜனநாயக அம்சமாக இருந்ததே இந்த சட்டமூலம் தான். 2016 ஆம் ஆண்டு ஜுன் மாதம் 24 ஆம் திகதி தகவல் அறியும் சட்டமானது அடிப்படை உரிமைகளில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டு அரசியலமைப்பில் சேர்த்துக்கொள்ளப்பட்டது. பின்னர் 2017 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 3 ஆம் திகதி அது வர்த்தமானியூடாக அமுல்படுத்தப்பட்டது. 19 ஆவது திருத்தச்சட்டத்தில் நீக்கப்படாத நான்கு விடயங்களில் தகவல் அறியும் சட்டமூலமும் அடங்குகின்றது. மற்ற அனைத்துமே திருத்தங்களுக்குட்பட்டமையை நாம் அறிவோம். 

இந்நிலையில் இவ்வாறு தப்பிப் பிழைத்த சட்டமூலம் எந்தளவுக்கு மக்களுக்கு பயன்படுகின்றது என்ற மதிப்பீட்டை பிரதேசவாரியாக ஆணைக்குழு மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் உள்ளது. தற்போது முன்னெடுக்கப்பட்டிருக்கும் கலந்துரையாடல்களில் சிறுபான்மை மக்கள் அல்லது சிறுபான்மை சமூகங்கள் அதிகளவில் பங்கு கொண்டுள்ள பகிரங்க அதிகார சபைகளின் உறுப்பினர்கள் எந்தளவுக்கு இதில் ஆர்வம் கொண்டிருக்கின்றனர் போன்ற விடயங்களை ஆணைக்குழு வெளிப்படுத்த வேண்டும்.

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2021-02-28#page-8

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க https://bookshelf.encl.lk/