(செ.தேன்மொழி)
கொழும்பில் தனிமைப்படுத்தல் சட்டவிதிகளுக்கு புறம்பாக செயற்படும் நபர்கள் தொடர்பில் விசேட சுற்றிவளைப்பு இடம்பெற்று வருவதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார்.


இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, கொழும்பில் பல பகுதிகளில் தனிமைப்படுத்தல் சட்டவிதிகள் மீறப்படுவதாக தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. இதன்போது முகக்கவசம் அணிதல் மற்றும் சமூக இடைவெளியை பேணல் போன்ற சட்டவிதிகளை சிலர் கடைப்பிடிப்பதில்லை என்று தெரியவந்துள்ளது. இத்தகைய நபர்கள் தொடர்பில் பொலிஸார் விசேட சுற்றிவளைப்புகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், மேல்மாகாணத்திலுள்ள அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் தொடர்பில் தொடர்ந்தும் கண்காணிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. சுகாதார பிரிவினர் மற்றும் பொலிஸார் இணைந்து இந்த நிறுவனங்கள் தொடர்பான சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதுடன் , இதன்போது தனிமைப்படுத்தல் சட்டவிதிகளுக்கு புறம்பாக செயற்படும் நிறுவனங்களுக்கு எதிராக கடுமையான  சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

இதேவேளை, நாடளாவிய ரீதியில் முகக்கவசம் அணியாமை தொடர்பில் இன்று காலை ஆறு மணியுடன் முடிவடைந்த 24 மணித்தியாலயத்திற்குள் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதற்கமைய கடந்த வருடம் அக்டோபர் மாதம் 30 ஆம் திகதி முதல் இதுவரையில் 3,271 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுப்பதுடன், தொடர்ந்தும் இது போன்ற சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.