(எம்.எம்.சில்வெஸ்டர்)
விவசாயியை பலப்படுத்த அரசாங்கமும் சகல பிரிவினரும் ஒன்றுபட வேண்டும் தேசிய விவசாய அமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான நிமல் பியதிஸ்ஸ வேண்டுகோள்

நெல் உற்பத்திச் செலவுக்கு ஏற்ப போதுமான வருமானமின்மை காரணமாக இன்று விவசாயிகள் கடனாளியாக ஆகியுள்ளதுடன், நெற் செய்கைக்காக ஒதுக்கப்பட்ட  9 இலட்சத்துக்கும்  அதிகமான ஹெக்டயார் நிலப்பரப்பு குறைவடைந்து செல்வதுடன் எதிர்காலத்தில் சோறு போடும் விவசாயி இல்லாமல் போகும் நிலை ஏற்படும். ஆகையால், விவசாயியை பலப்படுத்த அரசாங்கமும் சகல பிரிவினரும் ஒன்றுபடுவது அவசியம் என தேசிய விவசாய அமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான நிமல் பியதிஸ்ஸ வேண்டுகோள் விடுத்தார்.

கோட்டையில் அமைந்துள்ள தேசிய விவசாய அமைப்பின் காரியாலயத்தில் நேற்று (01) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

“நெற் பயிர்ச்சையில் ஈடுபடும் விவசாயிகள் உற்பத்திகேற்ற வருமானமின்மை, நீர்பாசனம் தொடர்பான பிரச்சினைகள், பயன்படுத்தப்படும் தொழில்நுட்பம் புதுப்பிக்காமை, பற்றாக்குறையான கட்டுப்பாட்டு விலை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு  முகங்கொடுத்து வருகின்றனர். அந்த பிரச்சினைகளுக்கு சரியான தீர்வுகளை எடுக்காது தட்டிக்கழிப்பது சரியாகாது. ஆகவே, மேற்கூறிய பிரச்சினைகளுக்கு அரசாங்கம் மற்றும் அதனுடன் தொடர்புப்பட்ட சகல பிரிவினரும் ஒன்றுபட்டு,  சகலரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தேசிய கொள்கை ஒன்றை  வகுக்க வேண்டும்” என அவர் சுட்டிக்காட்டினார்.

“உலகளாவிய ரீதியில் காணப்படும் உணவுப் பற்றாக்குறைக்கு சிறந்த முறையில் முகங்கொடுப்பதற்கு நாடென்ற ரீதியில் தேசிய ரீதியிலான சகல பிரிவினரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தேசிய உடன்படிக்கையொன்றை ஏற்படுத்த வேண்டும். சிகரெட் ஒன்றை 65 ரூபாவுக்கும், கால் போத்தல் மதுபானத்துக்கு 450 ரூபாவையும் செலவு செய்யும் நபர்கள், 110 ரூபாவுக்கு ஒரு கிலோ கிராம் அரிசியை வாங்குவதை பெரும் சிரமம் என கருதுகின்றனர்.

நெற் பயிர்ச்செய்கையில்  ஈடுபடும் விவசாயிகள் மற்றும் நுகர்வோர் ஆகியோருக்கிடையில் இடைத்தரகர்கள் பலர் காணப்படுகின்றமையை இந்த தேசிய கொள்கை திட்ட உடன்படிக்கையின்போது மிகவும் நுணுக்கமாக அவதானித்து செயற்பட வேண்டிய விடயமாகும். 2500 வரையிலான  சிறிய மற்றும் நடுத்தர அரிசி ஆலைகள் மூடப்பட்டுள்ளதாகவும், 3 - 4 மிகப்பெரிய அரிசி ஆலைகள் மாத்திரம்  காணப்படுவதால், அரிசி கொள்வனவின்போது, அவர்கள் ஏகாதிபத்திய ரீதியில் செயற்படுவதற்கு முற்றுப்புள்ளி வைத்து, மூடப்பட்டுள்ள சிறிய மற்றும் நடுத்தர அரிசி ஆலைகள் மீண்டும் திறக்கப்பட வேண்டும்.” என அவர் மேலும் தெரிவித்தார்.