தி. மு. க தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகிக்கும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.  அக்கட்சியின்  தலைவர் காதர் மொய்தீன் தெரிவித்திருக்கிறார்.

எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தி. மு. க கூட்டணி சார்பில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை சென்னையில் உள்ள தி. மு. க தலைமை நிலையமான அறிவாலயத்தில் நடைபெற்று வருகிறது.

நேற்று தி. மு. க தலைவர் மு. க. ஸ்டாலின் முன்னிலையில் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையில் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மைதீன் மூன்று தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்ட ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த காதர் மொய்தீன் தெரிவித்ததாவது, '' கருணாநிதி காலத்திலிருந்து கடைப்பிடிக்கப்பட்டு வரும் வழக்கத்தையும், வரலாற்றையும் மாற்றாமல் தி. மு. க தொகுதி பங்கீட்டில் முதல் கையெழுத்து, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியுடன் போடப்பட்டுள்ளது.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. எந்தெந்த தொகுதிகள் என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை. கேரளத்தில் 30 தொகுதிகளில் போட்டியிடுகிறோம்.

அதேபோல் மேற்கு வங்கம் மற்றும் அஸ்ஸாம் மாநிலத்தில் நடைபெறும் தேர்தலிலும் போட்டியிடுகிறோம். நாடு முழுவதும் ஏணி சின்னத்தில் போட்டியிடுவதால் தமிழகத்திலும் தனி சின்னமான ஏணி சின்னத்தில் போட்டியிடுகிறோம். இதுகுறித்த பிரச்சனை எதுவும் பேச்சுவார்த்தையின்போது எழவில்லை.'' என்றார்.

தி. மு. க கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஐவாஹிருல்லா தலைமையிலான மனிதநேய மக்கள் கட்சிக்கு இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன. இது தொடர்பான ஒப்பந்தத்தில் அக்கட்சியின் தலைவரான ஜவாஹிருல்லா கைசாத்திட்டார்.

இதைத் தொடர்ந்து செய்தியாளகளிடம் அவர் பேசியதாவது, “தி. மு. க கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சி இரண்டு தொகுதிகளில் போட்டியிடும். எந்த தொகுதிகளில் போட்டியிடுவது என்பது குறித்தும், எந்த சின்னத்தில் போட்டியிடுவது என்பது குறித்தும் ஒரிரு நாளில் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும்.” என்றார்.

இதனிடையே தி. மு. க கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் இஸ்லாமிய கட்சிகளுக்கு ஐந்து தொகுதிகளை ஒதுக்கியதால் இஸ்லாமியர்கள் மத்தியில் அ. தி. மு. க. வைக் காட்டிலும் தி. மு. க மீது மரியாதை ஏற்பட்டுள்ளதாக இஸ்லாமிய வாக்காளர்கள் தெரிவிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.