பாராளுமன்றத்துக்கு  தலைவர் பிரதமரா அல்லது சபாநாயகரா என கேள்வியெழுப்பியுள்ள இலங்கை சம சமாஜக் கட்சியின் தலைவரும் பேராசிரியருமான  திஸ்ஸ விதாரண, நீளம் பச்சை , சிவப்பு யானைகளின் கூடாரமாக இலங்கையின் அதி உச்ச அதிகார பீடம்  திகழ்வது வேடிக்கையாக உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

வடக்கு, கிழக்கையும் இணைத்துக்  கொண்டு தேசிய கருப்புக் கொடி போராட்டமொன்று  நல்லாட்சி  அரசாங்கத்துக்கு எதிராக மிக விரைவில் முன்னெடுக்கப்படும். எதிர்க் கட்சி தலைவர் இ.ரா சம்பந்தன் மௌனித்து இருப்பது போல கூட்டு எதிர்க் கட்சி  ஒரு போதும்   மௌனம்  காக்காது எனவும் அவர்  குறிப்பிட்டார்.

கொழும்பில் அமைந்துள்ள சம சமாஜக் கட்சியின்  தலைமை  அலுவலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே  அவர் இதனை குறிப்பிட்டார்.

இது தொடர்பில் மேலும் கூறிய அவர் ,

நாட்டை நிர்வகிக்கின்ற பாராளுமன்றத்தின் தலைவர் தற்போதைய நிலையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவாகவே காணப்படுகின்றார். சபாநாயகர் கரு ஜயசூரிய பெயரளவில் மாத்திரமே சபாநாயகராக இருந்து வருகின்றார். 

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் தமக்கு உள்ள அதியுச்ச அதிகாரங்களை பயன்படுத்தி அரசாங்கத்துக்கு எதிரான கட்சிகளையும் முடக்கும் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றார். 

அதுமட்டுமல்லாது அரசாங்கத்தின் செயற்பாடுகளை விமர்சிக்கும் கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கருத்துக்களுக்கு முன்னுரிமை தராமல் அவர்களை கீழ்த்தரமாக விமர்சிக்கும் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றார். 

இந்த நாசகார செயற்பாடுகளுக்கு ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்கள் தலை வணங்கி செயற்படுகின்ற அதே வேலை பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உறுப்பினர்களும் பிரதமரின் இந்த பிற்போக்கு தனமான செயலுக்கு மறுப்பு தெரிவிக்காமல் மௌனம் காத்து வருகின்றனர். 

  வற் வரி குறைக்கப்படாமல் மக்கள் தொடர்ச்சியாக நல்லாட்சி அரசாங்கத்தில் துன்பத்துக்கு உள்ளாக்கப்பட்டால் மிக விரைவில்  வடக்கையும் கிழக்கையும் இணைத்துக்கொண்டு கூட்டு எதிர்க்கட்சி இணைந்த லங்கா சமசாஜக கட்சியும் அதனது பங்காளிக் கட்சிகளும் நாடு தழுவிய ரீதியில் ஒருநாள் கருப்புக்  கொடி போராட்டத்தில்  ஈடுபடுவோம்.  அண்மையில் கூட்டு எதிரணியினர் மேற்கொண்ட பாதயாத்திரையைப் போல இந்த எதிர்ப்பு பேரணி அமையும்.