சமூக வலைத்தளங்களில் ஒன்றான இன்ஸ்டாகிராமில் 100 மில்லியன் பின்தொடர்பவர்களைக் கடந்த முதல் இந்தியர் என்ற பெருமையை விராட் கோலி திங்களன்று பெற்றார். 

அது மாத்திரமன்றி சர்வதேச கிரிக்கெட் அரங்கிலும் இன்ஸ்டாகிராமில் 100 மில்லியன் பின்தொடர்பவர்களைக் கடந்த முதல் வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் தலைவரான 32 வயதான விராட் கோலிக்கு பின்னர் போலிவூட் நடிகை பிரியங்கா சோப்ரா இன்ஸ்டாகிராமில் 60 மில்லியனுக்கும் அதிகமான பின்தொடர்பவர்களை கொண்டுள்ளார்.

இன்ஸ்டாகிராம் தவிர, டுவிட்டர் மற்றும் பேஸ்புக் போன்ற பிற சமூக ஊடக தளங்களிலும் கோஹ்லியை அதிகளவான ரசிகர்கள் பின் தொடருகின்றனர். 

தற்போது வரை அவர் மைக்ரோ பிளாக்கிங் தளத்தில் 40.8 மில்லியன் பின்தொடர்பவர்களைக் கொண்டிருக்கிறார், அதே நேரத்தில் பேஸ்புக்கில் 36 மில்லியனுக்கும் அதிகமான லைக்குகளைப் பெற்றிருக்கிறார்.

இன்ஸ்டாகிராமில் 266 மில்லியனுக்கும் அதிகமான பின்தொடர்பவர்களைக் கொண்ட போர்ச்சுகல் மற்றும் ஜுவென்டஸ் நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோ உலகளவில் முதலிடத்தில் உள்ளார்.

அவரைத் தொடர்ந்து பிரபல பாடகி அரியானா கிராண்டே 224 மில்லியன் பின்தொடர்பவர்களைக் கொண்டுள்ளார், ஓய்வுபெற்ற WWE சூப்பர் ஸ்டார் டுவைன் ஜான்சன் ( The Rock) 220 மில்லியன் பின்தொடர்பவர்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார்.