(எம்.மனோசித்ரா)

களனி - வனவாசல ரயில் கடவையில் இராணுவ பஸ் ரயிலுடன் மோதி இடம்பெற்ற விபத்தில் மூவர் படுகாயமடைந்துள்ளனர். இன்று திங்கட்கிழமை காலை 9.35 மணியளவில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

களனி - வனவாசல ரயில் கடவைக்கு அருகில் கண்டியிலிருந்து கொழும்பு கோட்டைக்கு சென்று கொண்டிருந்த ரயிலில் மோதி , அருகிலுள்ள வீடொன்றிலும் குறித்த இராணுவ பஸ் மோதியுள்ளது. இதனால் வீட்டிலிருந்த மூவர் காயமடைந்துள்ளனர்.

விபத்தில் பஸ்ஸின் பின் புறம் சேதமடைந்துள்ளது. ரயிலின் இயந்திர பக்கத்திலுள்ள கண்ணாடிக்கு மாத்திரம் சிறிதளவில் சேதம் ஏற்பட்டுள்ளது. விபத்து தொடர்பான விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.