(எம்.மனோசித்ரா)

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் 1000 ரூபாய் சம்பள அதிகரிப்பு இன்று திங்கட்கிழமை கூடிய சம்பள நிர்ணயசபையில் இரண்டாவது முறையாகவும் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பெருந்தோட்ட தொழிற்சங்கங்கள் மற்றும் அரசாங்க பிரதிநிதிகளின் வாக்குகளால் மீண்டும் 1000 ரூபா சம்பள அதிகரிப்பு நிறைவேற்றப்பட்டுள்ள போதிலும் , கம்பனிகள் அதற்கு இணக்கம் தெரிவிக்கவில்லை.

900 ரூபா அடிப்படை சம்பளம் , 100 ரூபாய் வரவு செலவு திட்ட நிவாரண கொடுப்பனவு என்றவாறு பெருந்தோட்ட தொழிலாளர்களின் நாளாந்த சம்பளம் 1000 ரூபாவாக உறுதிப்படுத்தப்பட்டதாகவும் , வேலை நாட்களை குறைப்பதாக கம்பனிகள் தெரிவித்தமை தொடர்பில் கடும் எதிர்ப்பை வெளியிட்டதாகவும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் சம்பள நிர்ணயசபை உறுப்பினரான மாரிமுத்து தெரிவித்தார்.

இறப்பர் உற்பத்தி தொழிலாளர்களும் நாளாந்த சம்பளம் 1000 ரூபாவாக உறுதி செய்யப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக சம்பள நிர்ணயசபையில் தீர்மானிக்கப்பட்ட இந்த விடயம் அரசாங்கத்தால் வர்த்தமானிப்படுத்தப்பட வேண்டும்.

அதேவேளை வேலை நாட்கள் தொடர்பான பிரச்சினை தொடர்பில் சம்பள நிர்ணயசபையில் தீர்மானிக்க முடியாது என்பதால் , எதிர்வரும் தினங்களில் இது தொடர்பில் பிரத்தியேகமான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படும் என்றும் மாரிமுத்து தெரிவித்தார்.

தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்த சம்பளமாக 1040 ரூபாவை வழங்க வேண்டுமென சம்பள நிர்ணயசபையில் பெப்ரவரி 8 ஆம் திகதி வாக்கெடுப்பின் மூலம் தீர்மானிக்கப்பட்டது.

இதற்கும் அப்போது கம்பனிகள் இணக்கம் தெரிவிக்காமையினால் 14 நாட்கள் ஆட்சேபனை தெரிவிப்பதற்கான காலம் வழங்கப்பட்டிருந்தது. அதனையடுத்து மீண்டும் பெப்ரவரி 19 ஆம் திகதி சம்பள நிர்ணய சபை கூட்டப்பட்ட போதிலும் கம்பனிகள் அதனை புறக்கணித்திருந்தன.

இந்நிலையிலேயே இன்றைய தினம் மீண்டும் சம்பள நிர்ணயசபை கூடி 1000 ரூபாய் நாளாந்த சம்பளம் என்ற தீர்மானம் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

எவ்வாறிருப்பினும் சம்பள நிர்ணயசபையால் தீர்மானிக்கப்பட்ட சம்பளத்தை வழங்குவதாயின் வாரத்தில் 3 நாட்கள் மாத்திரமே வேலை வழங்க முடியும் என்றும் , நாளொன்றுக்கு 16 கிலோவிற்கும் குறைவாக கொழுந்து பறிக்கும் பெண்களுக்கு முழு நாளுக்கான சம்பளம் வழங்கப்பட மாட்டாது என்றும் கம்பனிகள் சம்பள நிர்ணய சபைக்கு எழுத்து மூலம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.