(எம்.மனோசித்ரா)

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அறிக்கையின் பிரதிகள் மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடங்களிடமும் , பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையிடமும் கையளிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் சட்டப்பணிப்பாளர் ஜெனரல் ஹரிகுப்த றோஹனதீரவினால் இன்று திங்கட்கிழமை மல்வத்து பீடத்தின் மகாநாயக்க திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல தேரரிடமும் , அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்க வரகாகொட ஸ்ரீ ஞானரத்ன தேரரிடமும் அறிக்கை பிரதிகள் கையளிக்கப்பட்டன. 

அதனையடுத்து இன்றைய தினம் மாலை கொழும்பு - பொரளையிலுள்ள பேராயர் இல்லத்தில் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையிடமும் அறிக்கை கையளிக்கப்பட்டது.

2019 ஏப்ரல் 21 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டு தாக்குதல் தொடர்பில் ஆராய்வதற்காக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் 2019 செப்டெம்பர் 22 ஆம் திகதி ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு நியமிக்கப்பட்டது.

இவ் ஆணைக்குழுவினால் 2019 டிசம்பர் 20 ஆம் திகதி முதலாவது இடைக்கால அறிக்கையும் , 2020 மார்ச் 2 ஆம் திகதி இரண்டாவது இடைக்கால அறிக்கையும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டிருந்தன.

அதனையடுத்து சுமார் ஒரு வருடத்தின் பின்னர் இவ்வாண்டு பெப்ரவரி முதலாம் திகதி முழுமையான அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.

குறித்த அறிக்கையிலுள்ள விடயங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக அமைச்சர்கள் 6 பேர் அடங்கிய குழு உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் சுட்டிக்காட்டி வெவ்வேறு கருத்துக்கள் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

ஐக்கிய மக்கள் சக்தி , ஜே.வி.பி. உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை இதனை நிராகரித்துள்ள அதே வேளை ஆளுந்தரப்பின் பங்காளி கட்சியான சுதந்திர கட்சியும் இந்த அறிக்கையை ஏற்றுக் கொள்ளப்போவதில்லை என்று அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.