(நா.தனுஜா )

கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்போரின் சடலங்களை அடக்கம் செய்வதற்கான வழிகாட்டல்களை வெளியிடுவதில் அரசாங்கம் இழுத்தடிப்புச் செய்துகொண்டிருக்கிறது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹுமான் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

இதுபற்றி அவர் மேலும் கூறியதாவது,

கொவிட் - 19 தொற்றினால் உயிரிழப்போரின் சடலங்களை அடக்கம் செய்வதற்கு அனுமதியளிக்கும் வர்த்தமானி அறிவித்தல் அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.

எனினும் எங்கு, எவ்வாறு அடக்கம் செய்வது ஆகிய விபரங்கள் உள்ளடங்கிய வழிகாட்டல்கள் இன்னமும் வெளியிடப்படவில்லை.

தற்போது கிடைக்கப்பெற்ற தகவல்களின்படி காத்தான்குடி, அம்பாறை, மன்னார் ஆகிய பிரதேசங்களில் சடலங்களை அடக்கம் செய்வதற்கான இடமொன்றைத் தெரிவுசெய்வது குறித்து ஆராயப்படுவதாக அறியமுடிகின்றது.

எனினும் உலக சுகாதார ஸ்தாபனத்தின் வழிகாட்டல்களை அடிப்படையாகக்கொண்டு நோக்கும்போது, கொழும்பிலுள்ள மையவாடிகளிலேயே 6 அடியில் நிலத்தைத்தோண்டி அவற்றில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்போரின் சடலங்களை அடக்கம் செய்யமுடியும்.

ஆனால் அரசாங்கம் இன்னமும் வழிகாட்டல்களை வெளியிடுவதில் இழுத்தடிப்புச் செய்துகொண்டிருக்கிறது. 48 மணிநேரத்திற்குள் அவை வெளியிடப்படும் என்றும் மேலும் சில செய்திகள் வெளியாகியிருந்தன.

ஆகவே சடலங்களை அடக்கம் செய்வது பற்றிய வழிகாட்டல்கள் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கின்றோம் என்றார்.