ஹட்டன் கல்வி வலயத்தின் கோட்டம் இரண்டில் அமைந்துள்ள பொகவந்தலாவை பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் மாணவனையும் அவரது தாயாரையும் தாக்கிய சம்பவத்தில் குறித்த பாடசாலை அதிபர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

அதிபரால் தாக்குதலுக்குள்ளான மாணவன் இம்முறை க.பொ.த. சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ளமை  குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவத்தில் பிரதேசவாசிகளால் தாக்குதலுக்குள்ளான அதிபரும், அதிபரால் தாக்குதலுக்குட்பட்ட மாணவனின் தாயாரும் டிக்கோயா கிளங்கன் மற்றும் பொகவந்தலாவை வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இது சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

க.பொ.த. சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களை பிரதேச ஆலயமொன்றுக்கு வழிபாட்டிற்காக கடந்த திங்கட்கிழமை அதிபர் அழைத்துச்சென்றுள்ளார். 

அப்போது  மாணவர் ஒருவர் கையில் பட்டியொன்றை அணிந்து வந்துள்ளார். இதை அவதானித்த அதிபர் மாணவனை அவ்விடத்திலேயே கடுமையாக தாக்கியுள்ளார்.

பின்பு அன்று மாலை பாடசாலையில் இடம்பெற்ற பெற்றோர் சந்திப்பின் போது குறித்த மாணவன் தன்னை தண்டித்ததற்கான காரணத்தை அதிபரிடம் கேட்டுள்ளார்.

அச்சந்தர்ப்பத்தில் குறித்த மாணவனின் பெற்றோர் வருகை தந்திருக்கவில்லை. இதையடுத்து அதிபர், மாணவனை அழைத்து அனைத்து பெற்றோர்கள் முன்னிலையிலும் மீண்டும் தாக்கியுள்ளார்.

மாணவனின் தந்தை கொழும்பில் கடமையாற்றி வருவதால் அவரது தாயார் காயங்களுக்குள்ளான மாணவனை பொகவந்தலாவை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்வதற்காக அழைத்துச்சென்றுள்ளார்.

அன்றைய தினம் அப்பிரதேசத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்ததால் முறைப்பாட்டை ஏற்றுக்கொள்வதில் சிரமத்தை எதிர்நோக்கிய பொலிஸார், குறித்த மாணவன் இம்முறை பரீட்சை எழுதுவதால் விசாரணைக்கு அழைக்கப்பட வேண்டி வரும் என்றும் அது அவரது பரீட்சை நடவடிக்கைகளை பாதிக்கும் என்று கூறியதோடு இது தொடர்பில் தாம் அதிபரூடாக விசாரணை நடத்துவோம் என்று கூறியுள்ளனர். 

இதன் பின்னர் அவர் தனது மகனை பொகவந்தலாவை வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்ற போதும் காயங்களை அவதானித்த வைத்தியர்கள் சம்பவத்தை கேட்டறிந்து பொலிஸ் முறைப்பாடு இல்லாமல் மாணவனை அனுமதிக்க முடியாது என்று கூறியுள்ளனர்.

மறுநாள் தனது மகனுக்கு இடம்பெற்ற சம்பவம் குறித்து நியாயம் கேட்க தாயார் பாடசாலைக்கு சென்றிருந்தாலும் அதிபர் வருகை தரவில்லையென ஏனைய ஆசிரியர்களால் கூறப்பட்டுள்ளது.

இதனிடையே குறித்த அதிபர் சனிக்கிழமையன்று மாணவனின் பிரதேசத்துக்கு சென்றிருக்கின்றார். அதையறிந்து மாணவனின் தாயார் அதிபரிடம் சென்று தனது மகனை இரண்டு சந்தர்ப்பங்களில் தாக்கியமைக்கான காரணத்தை கேட்டுள்ளார்.

இதையடுத்து ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தில் அதிபர், மாணவனின் தாயாரை தாக்கி கீழே தள்ளியுள்ளதாகவும் இதை கண்ணுற்ற பிரதேசவாசிகள் அதிபரை தாக்கியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

தான் அதிபரால் தாக்கப்பட்டதாக காயமடைந்த மாணவனின் தாயார் பொகவந்தலாவை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதோடு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தாக்கப்பட்ட அதிபரும் முதலில் பொகவந்தலாவை வைத்தியசாலையிலும் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

அதிபர் மீது தாக்குதலை மேற்கொண்டவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இருதரப்பு முறைப்பாடுகளுக்கமைய விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொகவந்தலாவை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து கோட்டம் 2 இன் உதவி கல்வி பணிப்பாளர் ஏ.வேலுசாமியிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது மாணவன் தாக்கப்பட்டமை குறித்து எமக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது.

அதேவேளை இருதரப்பிலும் நாம் அக்கறை கொண்டுள்ளோம். இது தொடர்பாக நாமும் விசாரணைகளை வலயக்கல்வி பணிமனை ஊடாக ஆரம்பித்துள்ளோம் என்றார்.