(எம்.மனோசித்ரா)
நாட்டின் வெவ்வேறு பிரதேசங்களில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். அத்தோடு கடந்த வாரம் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் நால்வரும் ஞாயிறன்று உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், உயிரிழந்தவர்களில் முச்சக்கரவண்டி சாரதிகள் நால்வரும், பாதசாரிகள் நால்வரும், சைக்கிளில் சென்ற இருவரும், மேலுமிருவரும் உள்ளடங்குகின்றனர். நாளொன்று விபத்துக்களால் 10 - 12 பேர் உயிரிழக்கின்றமை கவலைக்குரியது. வாகன சாரதிகளிலும், பாதசாரிகளினதும் கவனக்குறைவால் இவ்வாறான விபத்துக்கள் இடம்பெறுகின்றன.

எனவே சாரதிகளும், பாதசாரிகளும் மிகக் கவனமாக செயற்படுமாறு கேட்டுக் கொள்கின்றோம். அவ்வாறில்லையெனில் விபத்துக்கள் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதனால் காயமடைந்து வாழ்நாள் முழுவதும் அங்கவீனமடையக் கூடிய நிலைமையும் ஏற்படும். எனவே தொலைபேசியில் பேசிக் கொண்டு வாகனத்தை செலுத்தல் உள்ளிட்டவற்றை தவிர்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம் என்றார்.