( எம்.மனோசித்ரா )

உள்நாட்டு பிரச்சினைகளுக்கு சர்வதேசத்தை நாடினால் மாத்திரமே தீர்வினைப் பெற்றுக் கொள்ள முடியும் என்று எண்ணும் நிலைக்கு நாட்டு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

தற்போதைய அரசாங்கத்தின் மீது மக்களுக்கு துளியளவும் நம்பிக்கை இல்லை என்று மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

பத்தரமுல்லையிலுள்ள ஜே.வி.பி. தலைமையகத்தில் நேற்று ஞாயிறுக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் ,

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையை எதிர்க்கும் தரப்பினர் நாம் அல்ல. எனினும் அவர்கள் இலங்கை தொடர்பில் தமது விருப்பத்திற்கேற்ப தீர்மானங்களை எடுக்க முடியாது என்பதில் நாம் உறுதியாகவுள்ளோம்.

அவ்வாறுள்ள போதிலும் , சர்வதேசத்தை அல்லது ஜெனீவாவை நாடினால் மாத்திரமே எமக்கான தீர்வு கிடைக்கும் என்று மக்கள் எண்ணுகின்றர்.

கொவிட் தொற்றால்  உயிரிழப்பவர்களின் சடலங்கள் கட்டாய தகனம் செய்யப்பட்ட விவகாரத்தில் , பாக்கிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் வருகையே தீர்வைப் பெற்றுக் கொடுத்துள்ளது என்று மக்கள் நம்புகின்றனர்.

இதே போன்று வடக்கு கிழக்கிலுள்ள மக்கள் மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கும் சர்வதேசத்தையே நாட வேண்டும் என்ற நிலைப்பாட்டிலுள்ளனர்.

மக்கள் இவ்வாறு சிந்திப்பதற்கான காரணம் அரசாங்கத்தின் செயற்பாடுகளேயாகும். அரசாங்கத்தால் உள்நாட்டு நீதிமன்ற கட்டமைப்பு சிதைக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவொன்று நீதிமன்ற செயற்பாடுகளை சவாலுக்குட்படுத்தியுள்ளமையே இதற்கான காரணமாகும். இதே நிலைமை தொடருமாயின் இலங்கை எதிர்காலத்தில் பாரிய நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்க நேரிடும் என்றார்.