2020 ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை இன்று ஆரம்பமாகவுள்ளது.

பரீட்சார்த்திகள் பரீட்சை ஆரம்பமாவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னர் பரீட்சை நிலையங்களுக்கு வருகை தர வேண்டும் என திணைக்களம் கேட்டுக்கொண்டிருக்கின்றது.

கொவிட் அனர்த்த நிலை காரணமாக சுகாதார வழிமுறைகள் முறையாக பின்பற்றப்படுவதனால் நேரகாலத்தோடு பரீட்சை நிலையங்களுக்கு சமுகமளிக்குமாறு பரீட்சார்த்திகளிடம் பரீட்சைகள் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

எதிர்வரும் 10 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இந்த பரீட்சையில் 6 லட்சத்து 22 ஆயிரத்து 352 பேர் தோற்றவுள்ளனர். இவர்களில் 4 லட்சத்து 33 ஆயிரத்து 746 பேர் பாடசாலை பரீட்சார்த்திகளாவர். நாடு பூராகவும் 4 ஆயிரத்து 513 பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, சகல மாவட்டங்களிலும் குறைந்த பட்சம் இரண்டு விசேட பரீட்சை மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. பிரதேச பொதுச் சுகாதார பரிசோதகர்கள் உட்பட சுகாதார அதிகாரிகளின் ஆலோசனைகளின் பிரகாரம் சுகாதார வழிமுறைகள் பேண்பபடுவதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பரீட்சையின்போது ஒவ்வொரு பரீட்சை நிலையத்திற்கும் வழமையான மேற்பார்வையாளர் நோக்குனர்களுக்கு மேலதிகமாக கொவிட் வைரசு தொற்றுக் தொடர்பில் விசேட நோக்குனரொருவர் நியமிக்கப்படவுள்ளார்.

அவர் கொவிட் தொடர்பான சகல நடவடிக்கைகளுக்கும் பொறுப்பாகவிருப்பார். சிலவேளை பரீட்சைநிலையத்தில் பரீட்சார்த்திக்கு காய்ச்சல் அல்லது அசாதாரண நிலைமை ஏற்படுகின்ற போது அதனைக்கையாளவென இவ்விசேட நோக்குனர் நியமிக்கப்பட்டுள்ளார்.

தனிமைப்படுத்தல் குடும்பங்களிலிருந்துவரும் பரீட்சார்த்திகளுக்கு புறம்பாகவைத்து பரீட்சை நடத்துவதும் ஒரு ஏற்பாடாகும்.

மேற்பார்வையாளர்கள் அவரவர் வலயத்திலேயே நோக்குனர்களையும் தெரிவுசெய்தல்வேண்டும்.

இன்று ஆரம்பமாகவுள்ள சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் மற்றும் பரீட்சை நிலையங்களில் கடமையில் ஈடுபடும் ஊழியர்களுக்கு விசேட பஸ் சேவையை மேற்கொள்ளவுள்ளதாக போக்குவரத்து சபைத் தலைவர் கிஞ்சிலி ரணவக்க தெரிவித்துள்ளார்.

மாணவர்கள் மற்றும் பரீட்சை நிலையங்களில் கடமையில் ஈடுபடும் ஊழியர்களுக்கு போக்குவரத்து வசதிகளை வழங்குமாறு கல்வி அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதற்கமைவாகவே பரீட்சை நேர அட்டவணைகளுக்கு அமைவாக விசேட பஸ் சேவை இடம்பெறும் என்றும் அவர் குறிப்பிட்டார்.