(இராஜதுரை ஹஷான்)

உயிர்த்த ஞாயிறு தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையை கொண்டு அரசாங்கத்தை நெருக்கடிக்குள்ளாக்குவது சுதந்திர கட்சியின் நோக்கமல்ல.

இவ்விடயம் குறித்து ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தையினை முன்னெடுக்க தீர்மானித்துள்ளோம் என பாராளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி தெரிவித்தார்.

பாராளுமன்றத்தை கலைக்க அரசாங்கம் ஆராய்கின்றது - சந்திம வீரக்கொடி | Virakesari .lk

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் ,

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முழுமையற்ற அறிக்கையினை சமர்ப்பித்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பொதுபல சேனா அமைப்பு உட்பட பௌத்த அமைப்புக்கள் ஆகிய குறுகிய தரப்பினரை மையப்படுத்தியதாக அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி முழுமையாக நிராகரிக்கிறது. 

இரு வேறுப்பட்ட கொள்கையினை அடிப்படையாகக் கொண்டு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது என்பதை பல விடயங்கள் ஊடாக அறிந்துக் கொள்ள முடிகிறது. குண்டுத்தாக்குதலின் பின்னணியில் இருந்தவர்களை பகிரங்கப்படுத்த  விசாரணை ஆணைக்குழு தவறியுள்ளது.

பல எதிர்பார்ப்புக்களை அடிப்படையாகக் கொண்டு நாட்டு மக்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தை தோற்றுவித்தார்கள்.

ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதலின் உண்மை காரணிகள் பகிரங்கப்படுத்தப்படும் என்பது ஒட்டுமொத்த மக்களினதும் பிரதான எதிர்பார்ப்பாக காணப்பட்டது. மக்கள் தம்மீது கொண்டுள்ள நம்பிக்கையை பாதுகாக்கும் வகையில் அரசாங்கம் செயற்பட வேண்டும்.

நல்லாட்சி அரசாங்கத்தின் மீது நாட்டு மக்கள் கொண்டிருந்த நம்பிக்கை குறுகிய காலத்தில் இல்லாமலாக்கப்பட்டதால் மக்கள் தேசிய அரசாங்கத்தை முழுமையாக நிராகரித்தார்கள். ஆகவே அரசியல் சம்பவங்களை அனைத்து தரப்பினரும் ஒரு படிப்பினையாக கொள்ள வேண்டும்.

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு சமர்ப்பித்த அறிக்கையை ஆராய அமைச்சரவை உறுப்பினர்களை உள்ளடக்கிய குழு நியமிக்கப்பட்டது.

இக்குழு நியமனம் தொடர்பிலும், குழுவின் உறுப்பினர்கள் குறித்தும் மக்கள் மத்தியில் தவறான நிலைப்பாடு ஏற்பட்டது. இதனால் அரசாங்கத்துக்கு பாதிப்பு ஏற்பட்டது. என்பதை ஆளும் தரப்பின் உறுப்பினர் என்ற அடிப்படையில் பகிரங்கமாக தெரிவிக்கின்றேன்.

ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் தொடர்பிலான அறிக்கையை கொண்டு அரசாங்கத்தை நெருக்கடிக்குள்ளாக்குவது சுதந்திர கட்சியினரது நோக்கமல்ல.

மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை அரசாங்கம் பாதுகாக்க வேண்டும் என்பதையே வலியுறுத்துகின்றோம். இவ்விடயம் குறித்து ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தையினை முன்னெடுக்க தீர்மானித்துள்ளோம் என்றார்.