(எம்.மனோசித்ரா)

உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு இரண்டு வருடங்கள் நிறைவடையவுள்ள நிலையில் பாதிக்கப்பட்ட மக்கள் தமக்கான நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி எதிர்வரும் 7 ஆம் திகதி அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

சகல கத்தோலிக்க தேவாலயங்களிலும் ஞாயிறு ஆராதனை நிறைவடைந்த பின்னர் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுப்பதற்கு தீர்மானித்திருப்பதாக கொழும்பு பேராயர் இல்லத்தின் ஊடக இணைப்பாளர் அருட்தந்தை ஜூட் பெர்னாண்டோ கேசரிக்கு தெரிவித்தார். 

இலங்கை கத்தோலிக்க ஆயர் மன்றத்தினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அருட்தந்தை ஜூட் பெர்னாண்டோ தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில் , குறித்த அறிக்கை முழுமையற்றது எனவும் திருப்தியடைக் கூடியதாக இல்லை என்றும் அரசியல்வாதிகள் உள்ளிட்ட பலரும் அதிருப்தி வெளியிட்டுள்ளனர். 

இந்நிலையில் தாக்குதல்களால் நேரடியாக பாதிக்கப்பட்ட கத்தோலிக்க மக்கள் தமக்கான நியாயத்தை வலியுறுத்தி இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.