டுபாயில் இருந்து போலி கடவுச்சீட்டுக்களுடன் இலங்கைக்கு வருகைத்தந்த  குடும்பம் ஒன்றை மீண்டும் டுபாய் நாட்டுக்கு திருப்பி அனுப்ப குடிவரவு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

போலி கடவுச்சீட்டுகளை பயன்படுத்தி கணவர், மனைவி மற்றும் சிறிய பிள்ளை ஒருவர் இன்று கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்தடைந்துள்ளனர்.

இவர்களை சோதனை செய்த போது மனைவி மற்றும் பிள்ளையிடம் டுபாய் நாட்டின் போலி கடவுச்சீட்டு இருந்துள்ளதுடன், கணவரிடம் ஜேர்மன் நாட்டு கடவுச்சீட்டு இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த குடும்பத்தினரின் பயணப்பையை சோதனை செய்தபோது குறித்த பையில் இருந்து  இரண்டு அகதிகள் கடவுச்சீட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த குடும்பத்தினர் இலங்கையில் இருந்து எதிர்வரும் 14 ஆம் திகதி ஜேர்மன் செல்வதற்கான ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை இலங்கையில் ஐ.எஸ் தீவிரவாதிகள் மற்றும் அதன் ஆதரவாளர்கள் நாட்டுக்குள் பிரவேசிப்பதற்கான சாத்தியம் காணப்படுவதாக பாதுகாப்பு ஆலோசனை பெறப்பட்டிருப்பதால், குறித்த குடும்பத்தினரை நாடுகடத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக  குடிவரவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.